ரயில்வே பட்ஜெட்டில் கர்நாடகாவுக்கு அதிக முக்கியத்துவம்: 11 புதிய ரயில்கள் உட்பட 21 புதிய திட்டங்கள்

ரயில்வே பட்ஜெட்டில் கர்நாடகாவுக்கு அதிக முக்கியத்துவம்: 11 புதிய ரயில்கள் உட்பட 21 புதிய திட்டங்கள்
Updated on
2 min read

மத்தியில் காங்கிரஸோ பாஜக வோ எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ரயில்வே பட்ஜெட்டில் கர்நாடகாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் கூட, பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு அடுத்து கர்நாடகாவுக்குத்தான் கூடுதல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

11 புதிய ர‌யில்கள், மைசூர்-பெங்களூர்-சென்னை பாதை உட்பட 5 புதிய திட்டங்கள், ஷிமோகா-சிருங்கேரி, கதக்-ஹரப்பனஹள்ளி உள்ளிட்ட 5 புதிய பாதைகள் என மொத்தம் 21 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மல்லிகார்ஜூன கார்கே தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் கூட கர்நாடகாவுக்கு 21 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. நாட்டின் தென் மூலையில் அமைந்திருக்கும் கர்நாடகாவுக்கு இத்தனை முக்கியத்துவம் ஏன்?

இதுவரை அதிக ரயில்வே அமைச்சர்கள்

சுதந்திர இந்தியாவில் பிரதமர் நாற்காலி யாருக்கு போனாலும், ரயில்வே அமைச்சர் பதவி மட்டும் கர்நாடகாவை தேடி வரும். ஆம், இதுவரை ரயில்வே அமைச்சர் பதவியை அதிகம் வகித்த மாநிலம் என்ற பெருமை கர்நாடகாவையே சேரும். 1963-ல் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்ததில் ஆரம்பித்து, தற்போது நடைபெற்றுவரும் மோடி அமைச்சரவைவரை கர்நாடகாவைச் சேர்ந்த 9 பேர் ரயில்வே அமைச்சர்களாக பதவி வகித்துள்ளார்கள்.

1962-ல் நேருவின் அமைச் சரவைவில் ஹெச்.சி.தாசப்பா முதல் முறையாக ரயில்வே அமைச்சரானார். அவரைத் தொடர்ந்து 1967-ம் ஆண்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் மங்களூரை சேர்ந்த சி.எம்.பூனச்சா இத்துறைக்கு அமைச்சரானார்.

1971-ல் மீண்டும் இந்திரா காந்தி பிரதமரானபோது, ஹெச்.ஹனுமந்தையாவும் அவருக்குப் பிறகு 1972-ல் டி.எம்.பாயும் ரயில்வே அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். 1979-ல் ஜனதா கட்சியைச் சேர்ந்த சரண் சிங் தலைமையில் ஆட்சி அமைந்த போது, மீண்டும் டி.எம்.பாய் ரயில்வே அமைச்சரானார்.

இதேபோல மீண்டும் 1989-ல் வி.பி.சிங் தலைமையில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைந்தபோது மங்களூரைச் சேர்ந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ் ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1991-ல் ஆந்திராவைச் சேர்ந்த நரசிம்மராவ் பிரதமரானபோது கர்நாடகாவைச் சேர்ந்த சி.கே.ஜாபர் ஷெரீப் ரயில்வே அமைச்சரானார்.

சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மன்மோகன் சிங் ஆட்சியில் மல்லிகார்ஜுன கார்கே இந்தப் பதவியை வகித்தார். இப்போது மோடி அமைச்சரவையில் சதானந்த கவுடா ரயில்வே அமைச்சராகி உள்ளார்.

ரயில்வே அமைச்சர் பதவி கர்நாடகாவுக்கு வழங்கப்படாத காலகட்டத்தில் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரயில்வே இணை அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது. அதன்படி 1980-ல் சி.கே.ஜாபர் ஷெரீப், 2003-ல் பசன்ன கவுடா மற்றும் 2009-ல் கே.ஹெச்.முனியப்பா ஆகியோர் ரயில்வே இணை அமைச்சர்களாக பொறுப்பு வகித்தனர்.

அதிக முக்கியத்துவம் ஏன்

பெங்களூரை சுற்றி 50 கி.மீ.தொலைவில் உள்ள ராம்நகர், தும்கூர், நெலமங்களா, ஓசூர் ஆகிய பகுதிகளிலிருந்து தினமும் பெங்களூர் வந்து செல்லும் வண்ணம் 4 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முந்தைய ரயில்வே அமைச்சர்கள் கர்நாடகாவுக்காக பிரத்யேகமாக அறிவித்த அதிரடி சலுகைகளைக் காட்டிலும், சதானந்த கவுடா கூடுதல் சாதனையை நிகழ்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.

ரயில்வே துறையைப் பொறுத்தவரை கர்நாடகாவைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் அமைச்சர்களாக நியமிக்கப் படுவதால், அம்மாநிலத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப் படுவது தொடர்கதையாகி வருகிறது. அதேநேரம் பிஹார், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ந்து புறக் கணிக்கப் படுகின்றன.

இதுகுறித்து, பாரதிய ரயில் தலித் தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர் ஜி.சி.ஸ்ரீதரன் கூறும்போது, “நாட்டில் முதன்முறையாக புல்லட் ரயில், பெண் பயணிகளுக்கு சர்வதேச தரத்தில் பாதுகாப்பு, விபத்துகளை கண்டறியும் மையம், இணைய தளம் மூலம் சாதரண பயணச் சீட்டு பெறும் முறை என பல திட்டங்களை அமல்படுத்துமாறு கடந்த மாதம் சதானந்த கவுடாவை சந்தித்து கோரிக்கை வைத்தோம். அதனை ஏற்றுக்கொண்டு பட்ஜெட்டில் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது” என்றார்.​

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in