Last Updated : 28 Oct, 2017 10:21 AM

 

Published : 28 Oct 2017 10:21 AM
Last Updated : 28 Oct 2017 10:21 AM

தேர்தலில் வேட்பாளர்களை முடிவு செய்ய குஜராத் மாநில பாஜக.வுக்கு அதிகாரம்

குஜராத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை இம்முறை கட்சியின் மாநிலத் தலைமையே முடிவு செய்யவுள்ளது.

குஜராத் சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 9, 14 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பல ஆண்டுகளுக்கு பின் பாஜக - காங்கிரஸ் இடையே தீவிரப் போட்டி நிலவுகிறது. பிரதமர் மோடி, அவரது வலதுகரமான அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால் இத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குஜராத் வேட்பாளர்களை இதுவரை பாஜகவின் மத்திய தேர்தல் குழு டெல்லியில் கூடி ஆலோசித்து, தேர்வு செய்தது. இதற்காக ஒரு தொகுதிக்கு மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களை பரிந்துரைப்பது மாநில பாஜகவின் வழக்கமாக இருந்தது. இம்முறை இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் குஜராத் மாநில பாஜக நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “சமூகங்களில் பிளவு உட்பட சில முக்கிய காரணங்களால், 19 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத் தேர்தலில் கடும் போட்டி உருவாகியுள்ளது. இதனால் கட்சி வேட்பாளர்களை மாநில நிர்வாகமே முடிவு செய்யும். கட்சித் தலைமையின் மத்திய தேர்தல் குழுவால் முக்கிய வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டால் வாய்ப்பளிப்பது குறித்து யோசிக்கப்படும். கட்சியின் நட்சத்திரப் பிரச்சாரகராக மோடியே களம் இறங்கியிருப்பதால் கட்சி முக்கியத் தலைவர்கள் குஜராத்தில் முகாமிடத் தொடங்கியுள்ளனர். எனவே தேவைப்பட்டால் அவர்களிடம் ஆலோசனை பெறப்படும்” என்று தெரிவித்தனர்.

குஜராத்தில் அதிக வாக்காளர்களாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், படேல் எனப்படும் பட்டிடார் சமூகத்தினர் மற்றும் தலித் வகுப்பினர் உள்ளனர். இந்த 3 பிரிவுகளின் முக்கியத் தலைவர்களான அல்பேஷ் தாக்கோர், ஹர்திக் பட்டேல், ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் காங்கிரஸுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் அவர்களின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்கள் பிரிந்து பாஜகவிடம் சென்று விட்டனர். இதனால் 3 பிரிவுகளிலும் ஏற்பட்ட பிளவு குஜராத் தேர்தலில் கடும் மோதலை ஏற்படுத்தி உள்ளது. இத்துடன் மத்திய அரசுக்கு உருவாகி வரும் எதிர்ப்பின் தாக்கமும் குஜராத் தேர்தலில் எதிரொலிக்கிறது.

இதற்கிடையே, குஜராத் அரசில் பணியாற்றிய சர்ச்சைக்குரிய அதிகாரிகள் பலரும் பாஜக சார்பில் போட்டியிட முயன்று வருகின்றனர். முக்கியமாக இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் வழக்கில் சிக்கிய காவல் துறை அதிகாரிகள் டி.ஜி.வஞ்சாரா, தரூண் பரோட், என்.கே.அமீன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்தும் குஜராத் பாஜக தீவிரமாக ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x