

சென்னை: ஆரவல்லி மலைத் தொடரின் பரப்பளவினைக் குறைக்கும் வகையிலான மத்திய அரசின் வரையறையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நவம்பர் 2025-இல், இந்திய உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசின் நிபுணர் குழு பரிந்துரைத்த ஆரவல்லி மலைகளுக்கானப் புதிய வரையறையை ஏற்றுக்கொண்டது.
இதன்படி, சுற்றியுள்ள நிலப்பரப்பிலிருந்து 100 மீட்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட உயரம் கொண்ட நிலப்பகுதிகள் மட்டுமே "ஆரவல்லி மலைகள்" என அங்கீகரிக்கப்படும். இந்த வரையறை மாற்றம், இந்தியாவின் மிகப்பழமையான மற்றும் மிக முக்கியமான ஒரு மலைத்தொடரின் அழிவுக்கு வழிவகுக்கும் ஆபத்துள்ளது.
இந்திய வன ஆய்வு நிறுவனத்தின் (FSI) தரவுப்படி, ஆரவல்லி தொடரில் உள்ள 12081 மலைக் குன்றுகளில் வெறும் 1048 (சுமார் 8.7%) மட்டுமே 100 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ளன. அதாவது, 91% மலைப்பகுதிகள் இனி சட்டப்படி "மலைகள்" அல்ல. இது அம்மலைகளைச் சுரங்கத் தொழில் மற்றும் கட்டுமானங்களுக்கு முழுமையாக இழந்திடும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தார் பாலைவனப் பரப்பு கிழக்கு நோக்கி முன்னேறுவதைத் தடுக்கும் ஒரு பெரும் "இயற்கை அரணாக" ஆரவல்லி உள்ளது. 100 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்ட சிறு குன்றுகளும், தொடர்ச்சியான மேடுகளும் சேர்ந்துதான் மணல் புயல்களையும், பாலைவன விரிவாக்கத்தையும் தடுக்கின்றன. இவற்றை நீக்கினால், டெல்லி மற்றும் வட இந்தியா பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.
மேலும், ஆரவல்லி மலைப்பகுதிகள் ஒரு மாபெரும் "நீர் உறிஞ்சியாக" செயல்படுகின்றன. மழைநீரை நிலத்தடிக்குக் கொண்டு செல்லும் இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகள் அழிக்கப்பட்டால், குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் இப்போதிருப்பதைவிட மிகவும் மோசமான நிலைக்குச் செல்லும். சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியை "உயரம்" என்ற ஒற்றை அளவுகோலை வைத்து நீக்குவது மக்களின் வாழ்வுரிமையைப் பாதிக்கிறது. இயற்கை வளங்களை அரசு ஒரு பொது சொத்தாகப் பாதுகாக்க வேண்டும். இந்த மறுவரையறை சுரங்க கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைவது அரசின் கடமையிலிருந்து தவறுவதாகும்.
மலைகளின் உயரத்தை மட்டும் பார்க்காமல், அதன் சூழலியல் பங்கு, வனவிலங்கு வழித்தடங்கள் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரையறை அமைய வேண்டும். வெறும் நிர்வாக வசதிக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவை மாற்றி, நிலவியல் மற்றும் சூழலியல் வல்லுநர்கள் கொண்ட புதிய குழுவை அமைக்க வேண்டும். 100 மீட்டருக்குக் குறைவான குன்றுகளையும் "சூழலியல் உணர்திறன் மண்டலங்களாக" அறிவித்து, அங்கு சுரங்கப் பணிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான நடவடிக்கையை ஒன்றிய அரசு முன்னெடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகின்றேன்' எனத் தெரிவித்துள்ளார்.