

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பற்றி ஏரியும் காட்டுத்தீ.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் 2-வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீயால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான காடுகள் தீயில் கருகின. இதனால் வனவிலங்குகள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர்-மேக மலை புலிகள் காப்பகம் செண்பகத்தோப்பு வனப்பகுதி யில் காப்புக்காடுகள், அடர்ந்த மரங்கள், ஆண்டு முழுவதும் நீர்வரத்துள்ள ஓடைகள் உள்ளதால் யானை, சிறுத்தை, மான், சாம்பல் நிற அணில், வரையாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. அரியவகை உயிரினங்கள வாழும் செண்பகத்தோப்பு வனப்பகுதி பல்லுயிர் தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் அழகர் கோயில் பகுதியில் நேற்று முன்தினம் காலை காட்டுத்தீ பரவியது. செண்பகத்தோப்பு காட்டழகர் கோயில் மேற்கு பகுதியில் பற்றிய காட்டுத்தீ, மலை முழுவதும் பரவியது.
மழை இல்லாமல் வனப்பகுதி முழுவதும் வறண்டுள்ளதாலும், வெயிலின் தாக்கம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி, 2 வது நாளாக நேற்றும் எரிந்து கொண்டிருக்கிறது.
அடிவாரத்தில் இருந்து மலை உச்சியில் உள்ள முதலியார் ஊற்று பங்களா வரை காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான காட்டு மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் தீயில் கருகி வீணாகின.
ஏற்கெனவே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகள் காட்டுத்தீ காரணமாக அடிவாரப் பகுதி மற்றும் கேரள வனப்பகுதியை நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றன. காட்டுத்தீ மேலும் பரவுவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.