

கள்ளழகர் எழுந்தருளும் இடத்தில் ஆகாயதாமரைச் செடிகள் நிறைந்து காணப்படுகின்றன.
படங்கள்: நா.தங்கரத்தினம்
மதுரை: சித்திரைத் திருவிழாவுக்குக்கூட வைகை ஆற்றை சுத்தப்படுத்தி பராமரிக்க இந்து சமய அறநிலையத்துறையும், பொதுப்பணித்துறையும் நடவடிக்கை எடுக்காததால், சீமைக்கருவேல மரங்களும், ஆகாயத்தாமரைகளும் நிறைந்துள்ளன. இதனால் ஆற்றில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின்போது தென்மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஆற்றின் இருகரைகளிலும் நீண்டதூரம் திரண்டு தரிசனம் செய்வது வழக்கம். இதற்காக விழாவுக்கு முன் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் வைகை ஆறு சுத்தம் செய்யப்படும்.
வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஆங்காங்கே தேங்காமல் சீராக உருண்டோடும் வகையிலும், ஆற்றில் படர்ந்த ஆகாயத்தாமரைகள், சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படும்.
ஆனால் இம்முறை மதுரை ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இடத்தில் மட்டுமே பொதுப்பணித்துறை, ஆகாயத்தாமரைச் செடிகளையும், மேடுபள்ளங்களையும் சரிசெய்துள்ளது. மேலும், யானைக்கல் தரைப்பாலம் அருகே உள்ள தடுப்பணைப் பகுதியில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றினர்.
ஆனால் ஓபுளாபடித்துறை பாலம் அருகில் உள்ள ஆகாயத்தாமரைச் செடிகள் அகற்றப்படாமலேயே உள்ளன. ஆழ்வார்புரம் பகுதி ஆற்றில் சீமைக்கருவேல முட்புதர்கள் அடர்ந்த காப்புக்காடு போல் காணப்படுகிறது.
இதனால் கள்ளழகரை காண வரும் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள் காயமடைய வாய்ப்புள்ளது. பொதுப்பணித்துறையினரின் இந்த பொறுப்பற்ற பணி பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், கள்ளழகர் எழுந்தருளும் மற்றும் விஐபிக்கள் வந்து செல்லும் பகுதியில் மட்டும் சீரமைப்பு பணிகள் நடந்துள்ளன. ஆனால் அங்கிருந்து கள்ளழகர் செல்லும் மதிச்சியம் முதல் குருவிக்காரன் சாலை பாலம் வரையிலான ஆற்றுப்பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.
ஆழ்வார்புரம் பகுதி வைகை ஆற்றில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள்.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வைக் காண மதுரை மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரள்வர்.
இதில் பலர் வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் கள்ளழகர், கருப்பணசாமி வேடமிட்டும், மொட்டையடித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுவர். அவர்கள் அனைவருமே வைகை ஆற்றில் திரண்டு கள்ளழகரை தரிசனம் செய்வதும் வழக்கம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய இந்து சமய அறநிலையத்துறையினர், பொதுப்பணித் துறையினர் இப்பணியை சரியாக செய்யவில்லை.
வரும் ஆண்டிலாவது மாவட்ட நிர்வாகம் விழிப்போடு செயல்பட வேண்டும். மேலும், வைகை ஆற்றில் நிரந்தரமாகவே சீமைக்கருவேல மரங்களை அகற்றி நீர்வழித்தடங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும், என்றனர்.