

திருவள்ளூர்: அமோனியா வாயுக் கசிவு விபத்து ஏற்பட்ட கன்னிகைப்பேர் தனியார் நிறுவனத்தில் உள்ள அமோனியா வாயு அகற்றும் பணி ஜூலை 4-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. இப்பணிக்கான முன்னேற்பாடுகள் குறித்து நேற்று திருவள்ளூர் ஆட்சியர் கவிதா ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த மாதம் 21-ம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 83 பேரில், ஏற்கெனவே 17 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இச்சூழலில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அலாதி மஹாராணா ஜுவாங்கா (29) என்ற பெண் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இந்நிலையில், விபத்து நடந்த நிறுவனத்தில் உள்ள அமோனியா வாயுவை பாதுகாப்பான முறையில் அகற்றும் பணி இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இப்பணிக்கான முன்னேற்பாடுகள் குறித்து நேற்று திருவள்ளூர் ஆட்சியர் கவிதா, தனியார் நிறுவனத்தில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஆட்சியர், தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு வீரர்கள், மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனங்களின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரிடம் அமோனியா வாயு அகற்றும் பணியின்போது மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
பொதுமக்கள் அவசர உதவிக்கு, கட்டுப்பாட்டு அறையை 9952590412 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்த விபத்து தொடர்பாக தனியார் நிறுவன உரிமையாளர்களான ஜோசப் மோகன், ஜோசப் ஜெகன், மேலாளர் டேனியல், ஒப்பந்ததாரர் சுரேஷ் பிரபாத் பெரியபாளையம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, ஊத்துக்கோட்டை ஜே.எம்.நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில், ஜோசப் மோகன், ஜோசப் ஜெகன், டேனியல் ஆகிய 3 பேர் பிணை கேட்டு திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடந்தது.
இதில், ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் பி.என்.உதயகுமார், அமோனியா வாயுக் கசிவால் 18 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த 3 பேருக்கும்
பிணை வழங்கக் கூடாது என்று ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட முதன்மை, அமர்வு நீதிபதி ஜூலியட் புஷ்பா 3 பேரின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.