அழிவின் விளிம்பில் கானமயில் பறவை - பாதுகாக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

அழிவின் விளிம்பில் கானமயில் பறவை - பாதுகாக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
Updated on
1 min read

சுற்றுச்சூழல் சமநிலைக்கும், பல்லுயிர் உணவு வலை மற்றும் உணவுச் சங்கிலி அறுந்து விடாமல் தடுப்பதற்கும் பறவைகளின் பங்கு இன்றியமையாதது. ஆனால், பறவைகளில் சில அரிய இனங்கள் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளன. இதில் ஒன்றுதான் கிரேட் இந்தியன் பஸ்டர்டு (Great Indian Bustard) என்றழைக்கப்படும் கானமயில்.

அதிக எடை கொண்ட இப்பறவைகள் இந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றன. ராஜஸ்தானின் மாநிலப் பறவை என்று பெயர் பெற்ற இப்பறவை திருச்சியில் அதிகமாக காணப்பட்ட நிலையில், தற்போது வெகுவாக குறைந்துவிட்டதாகவும், இப்பறவையின் இனப்பெருக்கத்துக்கு உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வனவிலங்கு பாதுகாப்பு உயிரியல் ஆர்வலர் அசோக் சக்கரவர்த்தி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: சங்கக்கால இலக்கியங்களில் ‘கானமயில் ஆட கண்டிருந்த வான்கோழி’ என கானமயில் குறித்து அவ்வையார் பாடியுள்ளார். திருச்சி மாவட்டத்தில் லால்குடி அருகேயுள்ள குமுளூர், கண்ணாக்குடி, புள்ளம்பாடி, சங்கேந்தி ஆகிய பகுதிகளில் 100 ஆண்டுகளுக்கு முன்பு அதிக எண்ணிக்கையில் இப்பறவைகள் காணப்பட்டன.

திருச்சி, கோவை, சேலம், மதுரை, திண்டுக்கல், பழநி, சிவகங்கை, அருப்புக்கோட்டை, ஒகேனக்கல் ஆகிய பகுதிகளில் பரவலாக இருந்த கானமயில் பறவைகள், தற்போது ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மட்டுமே காணப்படுகின்றன. நாடு முழுவதும் மொத்தம் 150 கானமயில் பறவைகள் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்பறவைகளைப் பாதுகாக்க ராஜஸ்தானில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பாலைவன தேசிய பூங்கா மற்றும் ராம்தேவ்ரா கிரேட் இந்தியன் பஸ்டர்டு பாதுகாப்பு மையத்தில், இப்பறவைகளின் இனப்பெருக்கத் திட்டம் வெற்றி அடைந்துள்ளது. எனவே, இதுபோன்று திருச்சி மாவட்டத்தில் குறிப்பாக லால்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கானமயில் பறவைகள் பாதுகாப்புப் பூங்காவை தமிழக அரசு அமைத்து, அவற்றை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றார்.

அழிவின் விளிம்பில் கானமயில் பறவை - பாதுகாக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
புதிய தொழிலாளர் சட்டம் மிகப் பெரிய சீர்திருத்தம்: தொழில் அமைப்புகள் வரவேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in