

தென்காசி: செங்கோட்டை அருகே ரயிலில் அடிபட்ட புலி உயிரிழந்தது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து, தூத்துக்குடிக்கு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலையில் பகவதிபுரம் - செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே வந்துகொண்டு இருந்தது. அப்போது, அந்த வழியாக தண்டவாளத்தை கடக்க முயன்ற புலி ஒன்று ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது.
அதைத் தொடர்ந்து, அந்த வழியாக வந்த மற்றொரு ரயிலின் ஓட்டுநர், தண்டவாளத்தில் புலி அடிபட்டு கிடந்ததை பார்த்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தேசிய விலங்கான புலி, ரயிலில் அடிபட்டி இறந்தது குறித்து வனத்துறையினருக்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குநர் முருகன், தென்காசி மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன், உதவி வனப் பாதுகாவலர் நெல்லைநாயகம், வன கால்நடை மருத்துவர்கள் மனோகரன், சாந்தகுமார், உள்ளூர் கால்நடை மருத்துவர் சிவகுமார், திருநெல்வேலி வன பறக்கும்படை உதவி வனப் பாதுகாவலர் ஞான பாலமுருகன் மற்றும் வருவாய்த் துறையினர், விலங்குகள் பாதுகாப்பு சமூக ஆர்வலர்கள், ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புப் படையினர், ரயில்வே போலீஸார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.
சம்பவ இடத்தில் ஆய்வு செய்யப்பட்டு, உரிய விதிமுறைகளின்படி புலியின் உடல், உடற்கூராய்வு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, புலியின் உடல் வனப்பகுதியில் எரியூட்டப்பட்டது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “புலிகள் பொதுவாக சமவெளி பகுதிக்கு வருவது கிடையாது. தற்போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்த புலி சமவெளி பகுதி அருகே வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
ஏதாவது விலங்கை வேட்டையாட துரத்திச் சென்றபோது, அல்லது ரயிலின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை பார்த்து கண் கூசியதால் தண்டவாளத்தை கடக்க முடியாமல் நின்று அடிபட்டு இறந்திருக்கலாம்.
தென்காசி மாவட்டத்தின் வனப்பகுதிகளைச் சுற்றிலும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், பெரியார் புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் உள்ளன. தென்காசி மாவட்ட வனப்பகுதியில் 6 அல்லது 7 புலிகள் இருக்கலாம். புலியின் உயிரிழப்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.