ஆயிரக்கணக்கில் கரை ஒதுங்கிய ஊதா பட்டன் ஜெல்லி மீன்கள் @ தனுஷ்கோடி மன்னார் வளைகுடா பகுதி

ஆயிரக்கணக்கில் கரை ஒதுங்கிய ஊதா பட்டன் ஜெல்லி மீன்கள் @ தனுஷ்கோடி மன்னார் வளைகுடா பகுதி
Updated on
1 min read

ராமேசுவரம்: தனுஷ்கோடி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான ஊதா பட்டன் ஜெல்லி மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின.

ஜெல்லி மீன்கள் குழியுடலிகள் இனத்தைச் சார்ந்தவை. ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் மற்றும் பாக் நீரிணை கடல் பகுதியில் அதிகம் காணப்படுகின்றன.

கடல் உயிரினங்களிலேயே மிகவும் அழகானதும், ஆபத்தானவையுமான ஜெல்லிமீன்களின் நச்சுத்தன்மை மனிதர்களுக்கு வாந்தி, மயக்கம், மார்புவலி மட்டுமின்றி அதிகபட்சம் மரணத்தை ஏற்படுத்தி விடும்.

இதன் காரணமாக வலையில் சிக்கும் ஜெல்லி மீன்களை கையில் படாமல் மீண்டும் கடலிலேயே மீனவர்கள் விட்டுவிடுவார்கள். இந்நிலையில், ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரம் பகுதியிலிருந்து தனுஷ்கோடி கம்பிப்பாடு வரை 5 கி.மீ. பரப்புக்கு பட்டன் ஜெல்லி மீன்கள் ஆயிரக்கணக்கில் இறந்த நிலையில் கரை ஒதுங்கின.

இதனை தனுஷ்கோடி வந்த சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். இந்த ஜெல்லிமீன்களை பற்றி மீன்வளத்துறையினர் கூறியதாவது: கடல் வாழ் உயிரினங்களில் ஜெல்லி மீன்கள் மிகவும் மிருதுவானவை.

கடலில் ஏற்படும் சூழலியல் மாற்றங்கள் காரணமாகவும், மனிதர்களால் கடலில் கலக்கப்படும் கழிவுகள் காரணமாகவும் ஜெல்லி மீன்கள் இறந்து கரை ஒதுங்குகின்றன.

தனுஷ்கோடி கடல் பகுதியில் கரை ஒதுங்கியவை ஊதா நிற பட்டன் ஜெல்லிமீன்கள் ஆகும். பார்ப்பதற்கு சட்டை பொத்தான் அளவில் இருப்பதால், ‘பட்டன் ஜெல்லி மீன்’ என்று அழைக்கப்படுகிறது.

உயிருடன் உள்ள பட்டன் ஜெல்லி மீன்களை வெறும் கைகளில் தொடுவது அலர்ஜியை உண்டாக்கும் என்று கூறினர்.

ஆயிரக்கணக்கில் கரை ஒதுங்கிய ஊதா பட்டன் ஜெல்லி மீன்கள் @ தனுஷ்கோடி மன்னார் வளைகுடா பகுதி
ஒட்டன்சத்திரத்தில் வீட்டை சேதப்படுத்திய யானை: உயிர் தப்பிய தம்பதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in