தனுஷ்கோடியில் தென்படும் அரிய வகை வெண் வயிற்று ஆழிக் கழுகுகள்!

பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை
தனுஷ்கோடியில் தென்படும் அரிய வகை வெண் வயிற்று ஆழிக் கழுகுகள்!
Updated on
2 min read

மதுரை: தனுஷ்கோடியில் தென்படும் அரிய வகை வேட்டையாடிப் பறவையினமான வெண் வயிற்று ஆழிக் கழுகுகள் பாதுகாக்க அரசுக்கு இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட ராமநாதபுரம் கடலோரப் பகுதிகளில் அரிய வகை வெண் வயிற்று ஆழிக் கழுகள் காணப்படுவதை அடுத்து, பறவையியல் ஆர்வலர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். கடல் மீன்களையும், கடல் பாம்புகளையும் வேட்டையாடும் இந்த வேட்டையாடிப் பறவைகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்திய கடலோரப் பகுதிகளில் வெண் வயிற்று ஆழிக் கழுகு, ஒரு முக்கியமான வேட்டையாடிப் பறவை இனமாகும். உலகில் ஆஸ்திரேலியா, மற்றும் தென் கிழக்கு நாடுகளில் இவற்றின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இவற்றின் எண்ணிக்கை மிக கவலைக்கு உரியதாகவே உள்ளது. கடலோரங்களில் வசிக்கும் இந்த கழுகு தான் புராணங்களில் சித்தரிக்கப்படும் உண்மையான கருடன் ஆகும்.

ஆனால், தற்காலத்தில் தவறுதலாக உருவத்தில் மிகச் சிறிய செம்பருந்து கருடனாக புரிந்து கொள்ளப்படுகிறது. இவற்றின் இறக்கைகள் விரித்த நிலையில் இதன் அளவு ஐந்து முதல் ஏழு அடிகள் வரை இருக்கும். கடலில் மீன்களையும், கடல் பாம்புகளையும் வேட்டையாடும் வகையில் வலிமையான கால் நகங்களையும், கூர்மையான அலகுகளையும் இவைகள் பெற்று இருக்கும்.

இந்நிலையில், வெண் வயிற்று ஆழிக் கழுகுகள் குறித்த ஆய்வினை மன்னார் வளைகுடா பகுதிகளில் இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளையின் ரவீந்திரன், முனைவர் பைஜு மற்றும் ஆய்வு மாணவி மைத்திரி கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இவர்கள் கூறியது: “எங்களின் ஆய்வின்படி இக்கழுகு இனங்கள் உயரமான மரங்களை புறக்கணித்து மின் கோபுரங்களிலும், தொலைத் தொடர்புக் கோபுரங்களிலும், செயற்கை கட்டுமான பகுதிகளிலும் கூடமைக்க துவங்குகின்றன என அறிய முடிகிறது. இவைகள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் இடும். பெரும்பாலும் அவற்றில் இருந்து வெளி வரும் குஞ்சுகளில் ஏதாவது ஒன்று மட்டுமே பிழைத்து இருக்கும்.

இதுபோன்ற அரியவகை பறவைகளின் உண்மையான வாழ்விட பகுதிகள் ஆன உயர்ந்த மரங்கள், வெட்டப்படுவதாலும், பல்வேறு காரணங்களால் மனிதர்களால் தொடர்ந்து தொந்தரவு செய்யப்படுவதாலும், இடங்கள் ஆக்கிரமிக்க படுவதாலும் இவைகள் ஆபத்தான உயர் மின் அழுத்தம் பாயும் மின் கோபுரங்களை கூட்டமைக்க தேர்வு செய்கின்றன என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், இது ஒரு புறம் பாதுகாப்பு என்றாலும், பறக்கத் பழகும் நேரங்களில் இளம் பறவைகள் உயர் அழுத்த மின் கம்பிகளில் மோதி உயிர் இழக்கவும் செய்கின்றன. இதுவே மரங்களில் கூடமைத்தால் இந்த அபாயங்கள் நேருவது இல்லை.

கடந்த ஆண்டு ஆய்வின்படி வெண் வயிற்று ஆழிக் கழுகுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புதுமடம், மண்டபம், பாம்பன், வேதாளை, தனுஸ்கோடி பகுதிகளில் கூடு அமைக்கும் பணிகள் தொடங்கின. இவற்றில் சில கூடுகள் தொடக்கத்திலேயே புறக்கணிக்கப்பட்டன. ஒரு சில கூடுகள் இறுதி வடிவம் எடுக்கும் நிலையில் புறக்கணிக்கப்பட்டன.

இறுதியாக மூன்று, நான்கு கிமீ இடைவெளியில் அமைந்த மூன்று கூடுகளில் இனப் பெருக்கம் நடைபெற்றது. தொடக்கத்தில் மூன்று கூட்டில் ஆறு குஞ்சுகள் காணப்பட்டாலும், ஒன்று இறந்து விட மூன்று மாதம் கழித்து முழு வளர்ச்சி அடைந்து ஐந்து இளம் வெண் வயிற்று ஆழிக் கழுகுகள் வானில் வட்டமிடத் தொடங்கின. கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இது ஒரு நல்ல முன்னேற்றம்.

தமிழக அரசு வேட்டையாடி பறவைகளை பாதுகாக்கும் திட்டங்களை கடந்த ஆண்டு தொடங்கி உள்ளது. மக்களிடம், வெண் வயிற்று ஆழிக் கழுகுகள் போன்ற அரிய வகை கழுகினங்களின் வாழ்விடங்களை பாதுகாக்கவும், அவற்றின் முக்கியத்துவத்தை, விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

தனுஷ்கோடியில் தென்படும் அரிய வகை வெண் வயிற்று ஆழிக் கழுகுகள்!
முதல்வர் விஜய் தனது உதவியாளர்களின் அதிகாரப்பூர்வப் பதவிகளை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்: திமுக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in