

சென்னை: அரசு மற்றும் மாநகராட்சி கட்டிடங்களில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு வசதிகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி சார்பில் நிலத்தடி நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, நீர் ஆதாரக் வசதிகளைப் புனரமைத்தல் தொடர்பாக மழைநீர் சேகரிப்பு கருத்தரங்கம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் பேசியதாவது: மழைநீர் சேகரிப்பு என்பது தனிநபரின் பொறுப்பாக மட்டும் இல்லாமல், பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், கல்வி நிறுவனங்கள்.
தொழில் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுக்க வேண்டும்.
சென்னை மாநகர், கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் பருவமழை காலத்தில் நகர்ப்புற வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படுகிறது. இன்று சேமிக்கப்படும் ஒவ்வொரு மழைத்துளியும் நாளைய சென்னையின் நீர் பாதுகாப்புக்கு பங்களிக்கிறது.
மாநகராட்சி சார்பில், 1,858 மாநகராட்சி கட்டிடங்கள், 1,013 பூங்காக்கள், 87 விளையாட்டு மைதானங்கள், மழைநீர் வடிகால்களில் 30 மீட்டர் இடைவெளியில் 30 ஆயிரம் இடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் உரிமம் பெற்ற நில அளவையாளர்களின் தீவிர பங்கேற்புடன், ஏற்கெனவே உள்ள வசதிகள் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்யவும், செயலிழந்த அமைப்புகளைச் சீரமைக்கவும், அனைத்துக் கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்து அரசு கட்டிடங்கள், மாநகராட்சி கட்டிடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் முறையான பராமரிப்புடன் கூடிய செயல்படும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியும் நீர் சேமிப்புக்கான முன்மாதிரியாக மாற வேண்டும். ஒவ்வொரு மாணவரும் மழைநீர் சேகரிப்புக்கான தூதராகத் திகழ வேண்டும். மழைநீரை வெறுமனே வெளியேற்றுவதில் இருந்து மாறி, அதை ஒரு மதிப்புமிக்க வளமாகச் சேமிக்கும் நிலைக்கு நாம் நகர வேண்டும்.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் 41 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இன்னும் மழைக்காலம் இருக்கிறது. இன்னும் ஏரிகளில் நீர் நிரம்ப வாய்ப்ப்புள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இக்கருத்தரங்கத்தில் மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குநர் என்.ஓ.சுகபுத்ரா, வட்டார துணை ஆணையர்கள் ஸ்வேதா சுமன், எச்.ஆர்.கவுசிக், அஃதாப் ரசூல், கிரெடாய் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு ஆலோசகர் ஆர்.ஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.