

கட்டிடக் காடாக காட்சியளிக்கும் கொடைக்கானல். | படம்: ஆ.நல்லசிவன் |
பழநி: கொடைக்கானலில் 15 இடங்களில் நிலச்சரிவு அபாயம் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இந்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பேரிடர் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் கடந்த சில ஆண்டுகளாக விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டும், மலையை வெட்டியும் சட்டத் துக்கு புறம்பாக காட்டேஜ்கள், ரிசார்ட்கள் அதிக அளவில் கட்டப்பட்டு வருகின்றன.
இதனால் கொடைக்கானல் மலை கட்டிடங்களின் காடாக மாறி வருகிறது. இங்கு மழைக் காலங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
மேலும், சமீபத்தில் பேரிடர் மேலாண்மைக் குழு கொடைக் கானல் மலைப்பகுதியில் ஆய்வு நடத்தியது. அதில், கொடைக்கானல் அருகேயுள்ள குருசரடி, சவரிக்காடு, கோம்பைக்காடு உள்ளிட்ட 15 இடங்களில் நிலச்சரிவு அபாயம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளன.
இந்த இடங்களில் நிலச்சரிவை தடுப்பதற்கான நடவடிக்கைகளை பேரிடர் மேலாண்மை துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, ஊரக வளர்ச்சி துறை உட்பட அனைத்து துறைகளையும் உள்ளடக்கி 28 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பேரிடரை சமாளிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதிக மழையின்போது மண் சரிவு உள்ளிட்ட அசம் பாவிதம் நடக்கும்போது உடனடியாக பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மணல் மூட்டைகள், மரம் வெட்டும் கருவி, பொக்லைன் இயந்திரம், மீட்பு வாகனம் உட்பட தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.