மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் கல்வாழைகளை மிதக்க விட்டு தண்ணீரை சுத்தப்படுத்தும் பணி!

மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் கல்வாழைகளை மிதக்க விட்டு தண்ணீரை சுத்தப்படுத்தும் பணி!
Updated on
2 min read

மதுரை: தெப்பத் திருவிழாவை முன்னிட்டு மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் நன்னாரி வேர்கள், கல்வாழைகளை மிதக்கவிட்டு இயற்கை முறையில் தண்ணீரை சுத்தம் செய்யும் முயற்சியை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

மதுரை வைகை ஆற்றின் தென்கரையோரமாக திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் உருவாக்கப்பட்டது. தென்னிந்தியக் கோயில்களில் உள்ள தெப்பக்குளங்களிலேயே இந்த தெப்பக்குளம் மிகப்பெரியது என்று கூறப்படுகிறது. மதுரை மாநகரில் முக்கியமான பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாகவும் இந்த தெப்பக்குளம் திகழ்கிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான தெப்பத் திருவிழா, திருமலை நாயக்கர் பிறந்த நாளான தைப்பூசம் நாளில் இங்குதான் விமரிசையாக நடக்கும்.

முன்பு திருவிழா காலத்தில் வைகை ஆற்றின் கரையில் அமைக்கப்பட்ட உறை கிணறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு இந்த தெப்பத்தில் நிரப்பப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியின்போது வைகை ஆற்றிலிருந்து தெப்பக்குளம் வரையுள்ள கால்வாய் மீட்கப்பட்டு புனரமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆற்றிலிருந்து நேரடியாக தண்ணீர் தெப்பக்குளத்துக்கு கொண்டு வரப்பட்டு நிரப்பப்படுகிறது.

இதையடுத்து, தற்போது ஆண்டு முழுவதும் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில் வரும் ஜனவரியில் தைப்பூசத்தையொட்டி தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்தும் பணியை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் கல்வாழை, நன்னாரி வேர்களை தெப்பக்குளத்தில் போட்டு இயற்கை முறையில் தண்ணீரை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் நா.சுரேஷ் கூறுகையில், “கடந்த 5 ஆண்டுகளாக கல்வாழை, நன்னாரி வேர்கள் மூலம் தண்ணீரில் உள்ள மாசுகளை அகற்றி ஆக்சிஜனேற்றம் செய்து வருகிறோம். இதற்காக தென்னைமட்டையில் செம்மண் பரப்பில் கல்வாழையை வைத்து ‘டியூப்பை’ பயன்படுத்தி மிதக்கவிட்டுள்ளோம்.

கல்வாழை ரசாயன நஞ்சுகளை உணவாக எடுத்துக் கொண்டு நீரை சுத்தம் செய்யும். துர்நாற்றம் ஏற்படுத்தும் ஆர்கானிக், பாஸ்பேட், நைட்ரானிக் போன்ற நச்சுகளை இவை அழித்துவிடும். அதேபோல், நன்னாரி வேர்களும் நீரை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டவை.

இந்தத் திட்டத்துக்குப் பெரிய செலவுகள் கிடையாது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஆலோசனையின்படி இந்த ஏற்பாட்டை செய்துள்ளோம். இதன் மூலம் இயற்கை முறையில் குளத்திலுள்ள நீர் சுத்தமாகும்” என்று அவர் கூறினார்.

மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் கல்வாழைகளை மிதக்க விட்டு தண்ணீரை சுத்தப்படுத்தும் பணி!
திமுகவின் 2026 தேர்தல் அறிக்கை சவால்கள் என்னென்ன? - 2021 வாக்குறுதிகளை முன்வைத்து ஒரு பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in