தாமிரபரணியை புனரமைக்க ரூ.1,031 கோடியில் திட்ட அறிக்கை!

அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நீர்வளத் துறை தகவல்
தாமிரபரணியை புனரமைக்க ரூ.1,031 கோடியில் திட்ட அறிக்கை!
Updated on
1 min read

திருநெல்வேலி: தாமிரபரணியை புனரமைத்து பராமரிக்க ரூ.1,031 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக திகழும் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும். அதில் கழிவுகள் சேருவதை தடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கை அடுத்து, கடந்த சில மாதங்களுக்குமுன் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தாமிரபரணி ஆற்றின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டனர்.

இதனிடையே, திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் சார்பில், ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் ரூ. 59 கோடி மதிப்பீட்டில், தாமிபரணியை அழகுபடுத்தும் திட்டத்துக்கு சமீபத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தாமிரபரணியை மேம்படுத்த வேண்டும் என்றால் அதில் சாக்கடை கலக்கக் கூடாது.

குறிப்பாக, பாதாள சாக்கடை சேகரிப்பு நிலையமான ராமையன்பட்டி நிலையத்திலிருந்து ஒரு சொட்டு சாக்கடை நீர் கூட மீண்டும் தாமிரபரணியில் கலக்கக் கூடாது. மாநகராட்சிப் பகுதியில் உள்ள பழமையான, நதிக்கரை மண்டபங்கள் சீரமைக்கப்பட வேண்டும். இவற்றை எதையும் செய்யாமல், அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் தாமிரபரணியில் செய்யும் இந்த திட்டப்பணி எதிர்காலத்தில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்.

நதிக்குள் பூங்காக்கள் அமைத்தால், மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளத்தில் அவை மூழ்கி வீணாகிவிடும். எனவே, அழகுபடுத்தும் பணிக்காக செலவிடும் ரூ.59 கோடியில், மாநகரப் பகுதியில் தாமிரபரணி முழுவதும் கரைகளை மேம்படுத்தி, சாக்கடை கலக்காத நதியாக மாற்றிவிடலாம். எனவே, தாமிரபரணியை அழகுபடுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதனிடையே இந்த திட்டத்துக்கு தடைகோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு, அது விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், தாமிரபரணி ஆற்றை புனரமைக்கும் திட்டங்கள் உள்ளதா? என்பது குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நீர்வளத்துறையிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நீர்வளத்துறை அளித்த பதிலில், தாமிரபரணி ஆற்றை புனரமைக்க ரூ.1,031 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கை நீர்வளத்துறையின் முதன்மை செயலாளருக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாகவும், கடந்த ஜூன் 17-ம் தேதி நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தாமிரபரணி ஆற்றின் புனரமைப்பு பணிகளை 5 ஆண்டு தொலைநோக்கு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் வகையில், 2026–27-ம் ஆண்டுக்கான அறிவிப்பு பட்டியலில் இத்திட்டத்தை சேர்த்து அரசின் ஒப்புதலை பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணியை புனரமைக்க ரூ.1,031 கோடியில் திட்ட அறிக்கை!
பயிர்க் கடன் பிரச்சினை: சென்னையில் செப்.1 முதல் விவசாயிகள் உண்ணாவிரதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in