

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே புலிச்சோலையில், நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வரக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் காலம் தொட்டு நீலக்குறிஞ்சிப் பூக்கள் பூத்து வருவதால், நீலகிரி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. குறிஞ்சி மலரும் பகுதியைச் சேர்ந்த தோடர் மற்றும் பணியர் பழங்குடியினர் குறிஞ்சி மலர் பூக்கும் ஆண்டைக் கொண்டு தங்கள் குழந்தைகளின் வயதை கணக்கிடும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர்.
குறிஞ்சிப் பூ 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூப்பதால், அதனை பார்த்து ரசிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக, கர்நாடக, கேரள எல்லையான கூடலூர் பகுதியில் குறிஞ்சி மலர்கள் பூத்திருந்தன.
இந்நிலையில், மஞ்சூரை அடுத்த மேல்குந்தா அருகே உள்ள புலிச்சோலை பகுதி மற்றும் கிண்ணக்கொரை அருகில் உள்ள தாயக்கண்டி பகுதியில் நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது பூத்துக்குலுங்குகின்றன.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லேசாக மொட்டுகள் இருந்த நிலையில் தற்போது கண்ணைக் கவரும் கையில் மலர்ந்துள்ளன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் மலர்கள் மலர்ந்து மலைச்சரிவுகள் முழுவதும் நீலநிறப் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.
இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் குறிஞ்சி மலர்கள் பூத்த தகவல் கேட்டு சுற்றுலா பயணிகள் வர வாய்ப்புள்ளதால் வனத்துறையினர் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறையினர் கூறும்போது, ‘‘தற்போது குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள இடங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதாலும், யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதாலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளியாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என்றனர்.