மேட்டூர் அணை நீர்மட்டம் 428 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடித்து சாதனை!

Mettur Dam

மேட்டூர் அணை

Updated on
1 min read

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 428 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடித்து சாதனை படைத்தது.

மேட்டூர் அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 120 அடி. இது 93.47 டி.எம்.சி. நீர் கொள்ளளவு கொண்டது. தமிழகத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மேட்டூர் அணை முக்கிய பங்காற்றி வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறுது. இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நடப்பாண்டில் முழு கொள்ளளவான 120 அடியை 7 முறை எட்டி அணை நிரம்பியது.

இதனிடையே, மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 92 ஆண்டுகளில் ஒரே ஆண்டில் 7 முறை முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து, இன்று (23-ம் தேதி) வரை 428 நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100- அடிக்கு மேல் நீடித்து சாதனை படைத்துள்ளது.

இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன்பு, அணையின் நீர்மட்டம் கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதியில் இருந்து 2006-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி வரை 427 நாட்கள் 100 அடியாக நீடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீர்வரத்து சரிவு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 1,024 அடியாக இருந்த நிலையில் இன்று 695 கன அடியாக சரிந்துள்ளது. நீர்மட்டம் 109.72 அடியாகவும், நீர் இருப்பு 78.01 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு காவிரி ஆற்றில் 8,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

Mettur Dam
“ஊழல் திமுக ஆட்சியை அகற்ற ஆலோசித்தோம்” - பழனிசாமியை சந்தித்த பியூஷ் கோயல் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in