அரூர் பகுதியில் வறட்சியால் விவசாயம் கடும் பாதிப்பு

அணைகள், ஏரிகள் வறண்டுள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் சரிவு
கடுமையான வறட்சி காரணமாக முற்றிலும் வறண்ட நிலையில் உள்ள அரூர் பெரிய ஏரி.

கடுமையான வறட்சி காரணமாக முற்றிலும் வறண்ட நிலையில் உள்ள அரூர் பெரிய ஏரி.

Updated on
1 min read

அரூர்: அரூர் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சி நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 942 மி.மீ. இதில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்யவேண்டிய 117 மி.மீ. மழையில் இதுவரை 30 சதவீதம் மட்டுமே பெய்துள்ளது.

இதனால், அரூர் கோட்டத்தில் பாசனத்துக்கு நம்பிக்கை தரும் வள்ளி மதுரை அணை, பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள வாணியாறு அணை உள்ளிட்டவற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.

இந்த அணைகள் மூலம் நீர் பெறும் ஏரிகள் அனைத்தும் வறண்டுள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அபாயகரமான நிலைக்கு சென்றுள்ளது. இப்பகுதியில் சராசரி நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்ததை விட மேலும் 5.39 மீ. குறைந்து 14.24 மீட்டராக தற்போது உள்ளது.

பருவ மழை இல்லாத நிலையில் கோடைகாலத்தை போல் 100 டிகிரி பாரன்ஹீட்டைக் கடந்து கடுமைான வெப்பம் நிலவுகிறது.

இதனால் விவசாயத்திற்கான நீ்ர் தேவையும் அதிகரித்து வருகிறது. வழக்கமாக ஆடி மாதத்தில் பட்டம் பார்த்து விதைக்கும் விவசாயிகள் இம்முறை நீர் பற்றாக்குறை உள்ளதால் பெரும்பாலான நிலங்களில் விதைப்பு செய்யாமல் தரிசாகவே விட்டுள்ளனர்.

இதுகுறித்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது; ஏற்கெனவே எச்சரிக்கப் பட்டிருந்த எல்நினோ தாக்கம் காரணமாக அரூர் கோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, சோளம், ராகி, சாமை மற்றும் சிறு தானியப்பயிர்கள் 60 சதவீதம் காய்ந்துவிட்டன.

மஞ்சள், கரும்பு, வாழை, நெல் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மலர் சாகுபடி கடந்த ஆண்டை விட நிகழாண்டு 40 சதவீதம் அளவிற்கே உள்ளது.

இன்னும் சில நாட்களில் தொடர் மழை பெய்யாவிட்டால் கடுமையான பாதிப்பை விவசாயிகள் சந்திக்கும் நிலை உள்ளது. விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து அரசின் கவனத்திற்கு துறை சார்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளது, என்றனர்.

அரூர், கடத்தூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது; வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளின் பொருளாதாரத்துக்கு முக்கிய காரணியாக உள்ள கால்நடை வளர்ப்புக்கு பசுந்தீவனம் தட்டுப்பாடும் அதிகமாக உள்ளது. இதனால், கால்நடைகளின் தீவனத்திற்கு வைக்கோல் கட்டுகளையே நம்பி உள்ளனர். தற்போது வைக்கோல் கட்டு விலையும் ரூ.300 ஆக அதிகரித்துள்ளது.

இதனால், விவசாயிகள் தங்களது கால்நடைகளை அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் வாழ்வாதாரம் இழந்து கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். எனவே, தருமபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும், என்றனர்.

<div class="paragraphs"><p>கடுமையான வறட்சி காரணமாக முற்றிலும் வறண்ட நிலையில் உள்ள அரூர் பெரிய ஏரி.</p></div>
‘பெரியார் பிறந்தநாள் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பதா?’ – தினகரன் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in