

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் உறைபனியால் வெண் கம்பளம் போர்த்தியதுபோல காட்சியளித்த புல்வெளி.
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் குன்னூரில் நடப்பாண்டு அதிகபட்ச பனிப்பொழிவு உள்ளது. பல நாட்களாக இரவு நேர வெப்பநிலை 0 டிகிரியாக நீடித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் அத்துமீறி வனத்துக்குள் நுழைய கூடாது என வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் நீலகிரியில் குளிர்கால சீசனாகும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றம் காரணமாக மழை மற்றும் பனி பாதிப்பு தாமதமாக ஏற்படுகிறது. இந்நிலையில், ஊட்டி மற்றும் குன்னூரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக உறை பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
அதிகாலை நேரத்தில் உறை பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததற்கு ஏற்ப நேற்று ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான தலைக்குந்தா, காந்தல் பகுதிகளில் உறைபனி கொட்டிக் கிடந்தது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், தலைக்குந்தா பகுதியில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் பதிவானது. இதன் காரணமாக புல்வெளிகள் மற்றும் வாகனங்கள் மீது வெள்ளைக் கம்பளம் போர்த்தியதுபோல உறைபனி படிந்து, மினி காஷ்மீர்போல ஊட்டி காட்சி அளிக்கிறது.
தொடர்ச்சியாக உறைபனி பெய்வதால், தேயிலைச் செடிகள் மற்றும் பயிர்கள் கருகி வருகின்றன. உள்ளூர் மக்கள் உறைபனியால் திண்டாடி வரும் நிலையில், ஊட்டிக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் உறைபனியில் உற்சாகமாக நடந்து சென்று வீடியோ, செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டாடுகின்றனர்.
மேலும், உறைபனி காலநிலையை ரசிக்க, சுற்றுலாப் பயணிகள் பலரும் ஊட்டிக்கு ஆர்வமுடன் வருகின்றனர். இதனிடையே, சுற்றுலாப் பயணிகள் சிலர் தடையை மீறி அடர்ந்த வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து ‘ஹிடன் ஸ்பாட்’ என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், அடர்ந்த வனப்பகுதிக்குள் நுழைந்து டிரோன் கேமராக்களை பறக்க விட்டு வீடியோவும் பதிவிடுகின்றனர். இந்நிலையில், நீலகிரி வனப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அத்துமீறி நுழையக் கூடாது என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊட்டியில் தலைக்குந்தா முதல் பைன் காடுகள் வரை உள்ள வனப் பகுதியில் அத்துமீறி யாரும் நுழையக்கூடாது. வனத்தில் அத்துமீறி ட்ரோன் பயன்படுத்தக் கூடாது என்றும் வனத் துறையினர் எச்சரித்துள்ளனர். தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.