கோவை ஆச்சான்குளத்தில் குவிந்த ‘யூரேசியன் கூட்’ பறவைகள்!

வலசை வந்த பறவைகளால் சூழலியல் ஆர்வலர்கள் வியப்பு
ஆச்சான்குளத்தில் காணப்பட்ட 'யூரேசியன் கூட்’ பறவைகள்.

ஆச்சான்குளத்தில் காணப்பட்ட 'யூரேசியன் கூட்’ பறவைகள்.

Updated on: 
1 min read

கோவை: கோவை ஆச்சான்குளத்துக்கு 'யூரேசியன் கூட்" பறவைகளின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது.

கோவை சூலூர் அருகே முத்துக்கவுண்டன்புதூர் பகுதியில் உள்ள ஆச்சான்குளத்தில் கோவை இயற்கை கழகத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பறவை ஆர்வலர்கள் நேற்று பறவை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆச்சான்குளம் நீர்நிலைகளில் அசாதாரண எண்ணிக்கையிலான நாமக்கோழிகள் என்றழைக்கப்படும் 'யூரேசியன் கூட் பறவைகள் பெருந்திரளாகக் கூடியிருப்பதை பார்த்து வியந்தனர்.

இதுகுறித்து, கோவை இயற்கை கழகத்தை சேர்ந்த செல்வராஜ் கூறும்போது, "வழக்கமாக ஒற்றை இலக்கத்தில்தான் இந்த பறவைகள் காணப்படும். ஆனால் தற்போதைய களக் கணிப்பின்படி 1,000 முதல் 2,000 வரை இருக்கும். தென்னிந்தியாவில் 'யூரேசியன் கூட்' பறவைகள் ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்து வாழும் பறவைகளாக இருக்கின்றன. பரந்த இமயமலை பகுதியிலிருந்து வலசை செல்லும் பறவைக் கூட்டத்தின் ஆரம்ப வருகையை இது காட்டுகிறது” என்றார்.

நாட்டின் வடக்கு பகுதியில் நிலவும் உறை பனி, வெப்ப நிலை உள்ளிட்ட காரணங்களால் இந்த பறவைகள், தெற்கு நோக்கி இடம்பெயர்கின்றன. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தமிழ்நாட்டில் "யூரேசியன் கூட்' பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம் என்பதை தரவுகள் காட்டுகின்றன. அக்டோபர் தொடக்கத்தில் ஆச்சான் குளத்தில் ஏற்பட்டுள்ள இந்த ஆரம்ப கால வருகை, நீண்ட தூர குளிர்கால வலசை பறவைகளுக்கு முதன்மைத் தளமாகவும், புகலிடமாகவும் இந்த நீர்நிலை விளங்குவதை சுட்டிக்காட்டுவதாக சொல்கின்றனர் பறவை ஆர்வலர்கள்.

அவர்கள் கூறும்போது, "கோவை நீர்நிலைகளில் சுமார் 15 ஆண்டுகால தொடர் ஆவணப்படுத்தல் மற்றும் கண்காணிப்பில், பருவ காலத்தின் ஆரம்பத்திலேயே யூரேசியன் கூட் பறவைகள் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் குவிந்திருப்பதை அரிதாகவே கண்டுள்ளோம். மாறி வரும் வலசை காலக்கெடு மற்றும் உள்ளூர் வாழ்விடத்தின் ஆரோக்கியத்தைப் புரிந்து கொள்ள கூட்டமாக பறவைகள் படையெடுப்பு, ஆழமான சுற்றுச்சூழல் ஆய்வு தேவை என்பதை இந்த வருகை வலியுறுத்துகிறது” என்றனர்.

'யூரேசியன் கூட்' பறவை களை தவிர, புள்ளிமூக்குக் கூழைக் கடா, வர்ண நாரை, ஆசிய திறந்த வாயன், கார்கனி வாத்து மற்றும் பெரிய நீர்க்காகம் ஆகியவற்றின் குறிப்பிடத்தக்க வருகையும் பதிவானது. மேலும், நீலவாள் பஞ்சுருட்டான், தையல் சிட்டு மற்றும் பல்வேறு மணல் உல்லான் போன்ற பறவைகளும் காணப்பட்டன. பறவைகளின் இந்த வருகையானது, நகர்ப்புற நீர்நிலை அமைப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைப் பதாக பறவை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

<div class="paragraphs"><p>ஆச்சான்குளத்தில் காணப்பட்ட 'யூரேசியன் கூட்’ பறவைகள்.</p></div>
‘வெற்றி பயணம்’ திட்டத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு: வழக்கு தள்ளுபடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in