முதுமலை வனப் பகுதியில் வலம் வந்த ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு

முதுமலை வனப் பகுதியில் வலம் வந்த ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு
Updated on
1 min read

மசினகுடி: முதுமலை வனத்தை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில், கடந்த 25 ஆண்டுகளாக சுற்றித் திரிந்த ‘ரிவால்டோ’ என பெயரிடப்பட்ட ஆண் யானை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் வலம் வந்த யானைக்கு ‘ரிவால்டோ’ என பெயரிடப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ரிவால்டோ அதன் வழக்கமான வாழ்விடத்தில் காணப்படவில்லை.

இதையடுத்து மசினகுடி மற்றும் முதுமலை வனப்பகுதிகளில் வனத்துறையினர் அந்த யானையைத் தேடி வந்தனர். இந்நிலையில், வாழைத்தோட்டம்‌ கிராமம்‌ அருகே உள்ள கல்லட்டி கூடுதல்‌ காப்புக்காட்டில்‌, ‘ரிவால்டோ’ யானை படுத்த நிலையில் இருந்தது தெரியவந்தது.

அங்கு சென்ற வனக் கால்நடை மருத்துவர்‌ ராஜேஷ்குமார் யானைக்கு சிகிச்சைகளை மேற்கொண்டார்‌. ஆனால், சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது. கடந்த 25 ஆண்டுகளாக இப்பகுதியில் வலம் வந்து நட்புடன் பழகிய ‘ரிவால்டோ’வின் மறைவு முதுமலை சுற்றுவட்டார கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆர்.வித்யாதர் கூறியதாவது: ‘ரிவால்டோ’ என பெயரிடப்பட்ட 50 வயதான இந்த ஆண் யானை, தெப்பக்காடு யானை முகாமில்‌ சில காலம்‌ பராமரிக்கப்பட்டு, பின்னர்‌ மீண்டும் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

தும்பிக்கையில்‌ நிரந்தர குறைபாடு இருந்தபோதிலும்‌, வனச்சூழலுக்கு ஏற்ப சிறப்பாக தன்னை மாற்றி‌ கொண்டு, முதுமலை வனப்பகுதியை தனது வாழ்விடமாக கொண்டிருந்தது.

கல்லட்டி வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இரு நாட்களுக்கு முன்பு யானை கண்டறியப்பட்டது. கால்நடை மருத்துவரின்‌ ஆலோசனையின்‌ பேரில்‌, கடந்த 10ம் தேதி முதல்‌ 12ம் தேதி வரை யானைக்கு ராகி, வெல்லம்‌, புளி ஆகியவற்றுடன்‌ கலந்து வாய்வழி மருந்துகள்‌ மற்றும் ஹைபிரிட் நேப்பியர்‌ புல்‌ தீவனமாக அளிக்கப்பட்டது.

மற்ற யானைகளுடன்‌ மோதலால்‌ ஏற்பட்ட காயங்கள்‌ மற்றும் வயது முதிர்வு காரணமாக யானையின் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்துள்ளது முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது என்றார்.

முதுமலை வனப் பகுதியில் வலம் வந்த ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு
3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in