

மேட்டுப்பாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேழம் இயலியல் பூங்கா திறக்கப்படாததால், முட்புதர் நிரம்பிக் காணப்படும் காட்சி அரங்கு மற்றும் விளையாட்டு உபகரணங்கள்.
கோவை: கோவை அருகே, மேட்டுப்பாளையத்தில் ‘வேழம் இயலியல் பூங்கா’வை விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி என எண்ணற்ற வன உயிரினங்கள் இருந்தாலும், யானைகளின் எண்ணிக்கையே அதிகம் உள்ளன.
தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக காடுகளை இணைக்கும் முக்கிய யானை வழித்தடமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதி அமைந்துள்ளதால் இவ்வழியே கூட்டம் கூட்டமாக யானைகள் வலசை செல்வது வழக்கம்.
யானைகள் மீதான மனிதர்களின் வெறுப்புணர்ச்சியை போக்கும் முயற்சியாக வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் யானைகளின் முக்கியத்துவம், அவற்றின் வாழ்வியல் முறை, குணாதிசயங்கள் போன்றவற்றை விளக்க மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் சார்பில், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் வழியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான அரசு மரக்கிடங்கு வளாகத்தில், கடந்த 8 ஆண்டுகளாக ‘வேழம் இயலியல் பூங்கா’ அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
உலகில் வாழ்ந்த யானை இனங்கள், அழிந்து போன யானை இனங்கள், அவை வாழ்ந்த காலங்கள், நம் சங்க இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் யானைகளின் பங்களிப்பு, அதன் இயல்பு, வரலாறு போன்றவற்றை விளக்கும் சுவர் ஓவியங்கள், சிற்பங்கள், அரிய புகைப்படங்கள், மன்னர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட யானை உருவம் பொறித்த நாணயங்கள் என இந்த பூங்காவில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
இப்பணிகள் ஏறத்தாழ 80 சதவீதம் வரை நிறைவடைந்த நிலையிலும், வேழம் இயலியல் பூங்கா திறக்கப்படாமல் முடங்கியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, ‘‘வனத்தை ஒட்டிய பகுதியில் இப்பூங்கா அமைக்கப்பட்டு இருந்ததால் யானை மற்றும் வன விலங்குகள் குறித்து மேட்டுப்பாளையம் பகுதி பொது மக்கள், விவசாயிகள், மாணவ, மாணவியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்பட்டது.
பல லட்சம் ரூபாய் செலவில் கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட யானை பொம்மைகள் சேதம் அடைந்துள்ளதுடன் பூங்காவிற்காக வைக்கப்பட்ட புல்வெளிகள் செடி கொடிகள் காய்ந்து யாருக்கும் பயனற்ற வகையில் புதர் மண்டி காணப்படுகின்றன.
யானையை குறிக்கும் வேழம் என்ற அழகிய செந்தமிழ் சொல்லில் அமைய இருந்த இவ்விழிப்புணர்வு பூங்கா குறித்த ஆர்வம் உருவாகி வந்த நிலையில் திட்டம் தற்போது முடக்கப்பட்டு கிடப்பது வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.
இப்பூங்காவை விரைவில் திறக்க வேண்டும்’’ என்றனர். வனத்துறையினர், மாவட்ட நிர்வாகத்தினர் கூறும்போது, “வேழம் இயலியல் பூங்கா அமைக்கும் பணி ஏறத்தாழ எண்பது சதவீதம் நிறைவடைந்து விட்டது. முகப்பு ஆர்ச் அமைப்பது, கழிவறை கட்டுவது போன்ற ஒரு சில பணிகள் நிதி பற்றாக்குறை காரணமாக தடைபட்டுள்ளன.
விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு இறுதி கட்ட பணிகள் தொடங்கும்’’ என்றனர். மேட்டுப்பாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேழம் இயலியல் பூங்கா திறக்கப்படாததால், முட்புதர் நிரம்பிக் காணப்படும் காட்சி அரங்கு மற்றும் விளையாட்டு உபகரணங்கள்.