

கன்னியாகுமரி மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட பாசன கால்வாய்கள், 35-க்கும் மேற்பட்ட குளங்கள் என 100-க்கும் மேற்பட்ட நீராதாரங்களை அழித்து நான்குவழி சாலை பணிகள் நடந்து வருகின்றன.
குமரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட நீர்வழி கட்டுமானங்கள் உறுதியாய் நிற்கும் நிலையில், கன்னியாகுமரி-திருவனந்தபுரம் நான்கு வழி சாலை பணிக்காக இவற்றில் பெரும்பாலானவை உடைக்கப்பட்டு பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இதை கண்டித்து குமரி பாசனத்துறையினர், விவசாயிகள் பல்வேறு வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் தொடுத்ததின் விளைவாக விவசாயத்துக்கு பயன்படும் நீர்வழிப் பாதைகளை அழிக்காமல் நான்கு வழிச்சாலையை அமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பல்வேறு நீர்வழிப் பாதைகளை அடைத்ததுடன், பல்வேறு குளறுபடிகளுடன் நான்கு வழிச்சாலை பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பேச்சிப்பாறை அணை நீர் செல்லும் பட்டணங்கால்வாய் காமராஜர் காலத்தில் அமைக்கப்பட்டது. நூற்றாண்டை தொடப் போகும் நிலையில் இதுவரை இந்த கால்வாயில் எந்த ஒரு இடத்திலும் கட்டுமானங்களில் நீர் கசிவு இல்லை.
ஆனால், தற்போது நான்கு வழி சாலை அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பட்டணம் கால்வாய் செல்லும் பள்ளியாடி பகுதியில் கால்வாயை உடைத்து கட்டுமானங்களை கட்டினர்.
கட்டி முடிந்து தண்ணீர் திறந்தடன் தரமற்ற கட்டுமானங்களால் கால்வாய்க்குள் உடைப்பு ஏற்பட்டு அந்த பகுதி வழியே தண்ணீர் பெருமளவு வெளியேறி அருவி போல கொட்டுவதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைப்போல் இரணியல்ரோடு அரசமூட்டு குளம், சடையமங்கலம் பிள்ளாத்தி குளம், மணக்கரை பாம்பாட்டி குளம், தோட்டியோடு நாச்சியனமார் குளம், காஞ்சிரங்குளம், அம்பலத்தடிகுளம், செரிய குதிரை பாஞ்சான் குளம், காஞ்சிரங்கோடு ஆண்டார் குளம், தோட்டயோடு பிள்ளை குளம், ஆளூர் ரோடு செல்லங்குளம், சுங்கான்கடை பள்ளன் குளம், கொறக்குளி குளம், சுசீந்திரம் பிரம்தன் குளம், வழுக்கம்பாறை புறகுளம், பொற்றையடி தாணுமாலயன் குளம், கொட்டாரம் தேவர் குளம், கன்னியாகுமரி பண்ணி குண்டு குளம், காப்புக்காடு தாமரைகுளம், நட்டாலம் பெரியகுளம், திருவிதாங்கோடு மாம்பள்ளி குளம் போன்ற 35-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள், 60-க்கும் மேற்பட்ட பாசன கால்வாய்கள் அழிக்கப்பட்டு அவற்றின் மீது நாற்கரச் சாலை பணி நடந்து வருகிறது.
100-க்கும் மேற்பட்ட நீராதாரங்கள் அழிக்கப்பட்டதால் அப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, நாற்கரச் சாலையோ, சாலை விரிவாக்கமோ எப்பணியாக இருந்தாலும் குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட பாசன ஆதாரங்கள் சேதமாகாதவாறு வேளாண் அமைப்பினருடன் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி முடிவு செய்த பின்னரே நீராதார பகுதிகளில் கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதுடன், விவசாயிகளை திரட்டி பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ தெரிவித்தார்.