குமரியில் வீட்டு மனைகளாக மாறும் விளை நிலங்கள் - நெல் விவசாயம் அழியும் அபாயம்

நாகர்கோவில் அருகே வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ள நெல் வயல்கள்.

நாகர்கோவில் அருகே வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ள நெல் வயல்கள்.

Updated on
2 min read

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் வயல்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படும் நிலையில் இன்னும் 5 ஆண்டுகளுக்குள் நெல் விவசாயம் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து வகை விவசாய நிலங்கள் உள்ளன.

யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை, இந்த மலையில் இருந்து உருவாகும் பல்வேறு ஆறுகள், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள், இவற்றில் இருந்து பாசனம் பெறும் குளங்கள், பசுமையான வயல்வெளிகள், இருபோக சாகுபடி, மழைவளம், நீர் வளம் என இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக குமரி மாவட்டம் திகழ்ந்தது.. இங்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.

ஆனால், 2000 ஆண்டுக்கு பின்னர் வீட்டு மனைகளின் தாக்கம் காரணமாக 2010-ல் 10 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெற்றது, தற்போது 5 ஆயிரம் ஹெக்டேராக நெல் விவசாயம் குறைந்து வருகிறது.

அதுபோல் விளை பொருட்களின் ரகங்களும் அரிதாகி வருகின்றன. மாவட்டத்தில் 64 வகை நெல் ரகங்கள் பயிரிடப்பட்டன. தற்போது 6 ரகங்களே மிஞ்சியுள்ளன. அது போல் 300 மா, 200 பலா மர ரகங்கள், 45 வகை வாழை ரகங்கள் இருந்த நிலையில் தற்போது இவற்றில் சில ரகங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

அழிக்கப்படும் வயல்கள்: வயல்கள் போன்ற விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்ற வேண்டும் என்றால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை நீர்வர வழியின்றி தரிசாக இருக்க வேண்டும். ஆனால், நன்றாக நீர்வரத்து உள்ள வயல் வெளிகள் தரிசாக விடப்பட்டு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் துணையோடு விட்டு மனைகளாக மாற்றப்படுகின்றன.

சுசீந்திரம், பீமநகரி, ஆளுர், மருங்கூர், தேரூர், தாழக்குடி, வீரநாராயணமங்கலம், புத்தேரி என பல்வேறு பகுதிகளிலும் வெகு வேகமாக விவசாய விளை நிலங்கள் மண் நிரப்பபட்டு வீட்டு மனைகளாக மாற்றப்படுகின்றன. நகர் ஊரமைப்பின் அனுமதி விளை நிலங்கள் கபளீகரம் செய்வதை மேலும் தீவிரப்படுத்துவதாக உள்ளது.

வயல்கள் மற்றும் பாரம்பரியம் மிக்க மேற்கு தொடர்ச்சி மலைகளை அழிவிலிருந்து காப்பாற்ற தமிழ்நாடு மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தால் (ஹில் ஏரியா கன்சர்வேஷன் அத்தாரிட்டி) மலை கிராமங்கள் பட்டியல் இடப்பட்டு உள்ளன.

இதன்படி இங்கு வீட்டு மனைகள் அமைக்க வருவாய்த்துறை, வேளாண் பொறியியல் துறை, வனத்துறை, பொதுப்பணித் துறைகளிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். இதிலும் அனைத்து துறை அதிகாரிகளையும் உரிய முறையில் கவனித்து விதிகளை மீறி அனுமதி பெற்று உயர் நீதிமன்ற தீர்ப்பு, அரசு உத்தரவுகளை மீறி மலை கிராமங்கள் மற்றும் ராம்சார் பாதுகாப்பு நிலமான பறவைகள் சரணாலய பகுதி நிலங்களை பத்திர பதிவு செய்து விடுகின்றனர்.

அழியும் நீராதாரங்கள்: இத்தகைய விளைநிலங்களை வீட்டுமனைகளாக்கி பல கோடி ரூபாய் லாபம் பார்க்கும் கும்பலாம் நீர்வரத்து மற்றும் பாசன கால்வாய்கள், நீர் ஆதாரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம் அடியோடு அழிவதோடு, நிலத்தடி நீர் மட்டமும் அகல பாதாளத்துக்கு சென்று குடிநீர் தட்டுப்பாடு உருவாகிறது. மேலும் நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறும் பரிதாப நிலையை மாவட்டம் சந்தித்து வருகிறது.

திருவிதாங்கூர் நாட்டின் நெல் களஞ்சியமாக திகழ்ந்த கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதி நாஞ்சில் நாடு என பெயர் பெற்றது. அதுவும் இனி பெயர் அளவில் மட்டுமே புழங்கும் சொல்லாகி போகும் சூழல் உள்ளது. இயற்கை வளம் பாதிக்கப்பட்டு வருவதால் குமரியில் இயல்பை விட வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

வட துருவத்தில் இருந்து குமரிக்கு வருகை தரும் வெளிநாட்டு பறவைகளின் வருகையும் குறைந்து போனது. இதற்கு கட்டுப்பாடு விதிக்கக்கோரி குமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமூக பொதுநல இயக்க பொது செயலாளர் ஏ.எஸ்.சங்கரபாண்டியன் மனு அனுப்பியுள்ளார்.

அதில், ‘குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டம் ஆக்குவோம் என்பதை சொல் அளவில் இல்லாது அழிவின் விளிம்பில் மிஞ்சி உள்ள வயல்கள், நிலத்தடி நீர் ஆதாரங்களை பாதுகாப்பது மிகவும் அவசியம். எனவே, டெல்டா பகுதியைப் போல பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக குமரி மாவட்டத்தை அறிவித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

தற்போதைய நிலை தொடர்ந்தால் இன்னும் 5 ஆண்டுகளுக்குள் அதாவது 2030-க்குள் வயல்வெளிகள் இன்றி நெல் விவசாயம் முற்றிலும் அழிந்து போகும் அபாயம் ஏற்படும்’ என தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>நாகர்கோவில் அருகே வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ள நெல் வயல்கள்.</p></div>
“கூட்டணி குறித்து கட்சியினர் பொதுவெளியில் பேசக்கூடாது” - செல்வப்பெருந்தகை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in