

சென்னை: மாநகராட்சி சார்பில் பருவமழைக் காலங்களில் கிடைக்கும் மழைநீரைச் சேகரிக்க ரூ.6.88 கோடியில் 4 குளங்களை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில், பருவ மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதி மற்றும் பொதுமக்களை வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆறுகள், நீர்வழிக் கால்வாய்கள், குளங்கள் மற்றும் ஏரிகளில் தூர்வாருதல், கரைகளைப் பலப்படுத்துதல், தடுப்புச் சுவர் கட்டுதல், தடுப்புச் சுவர் உயர்த்திக் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
போதிய அளவில் மழைநீர் வடிகால்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகள் அமைத்தல், பருவமழையின்போது குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுத்து, மழை நீரைச் சேமிக்க விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் கொள்ளளவை அதிகரித்தல், குளத்தைச் சுற்றி புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளைமேற்கொள்ளுதல், பூங்காக்களில் மழைநீர் உறிஞ்சும் கட்டமைப்புகளை உருவாக்குதல், புதிதாக குளங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மாதவரம் மண்டலம் ஆவின் குட்டையில் ரூ.59 லட்சம் செலவிலும், 25-வது வார்டு பாண்டா குளத்தில் ரூ.91.60 லட்சம் மதிப்பீட்டிலும், அம்பத்தூர் மண்டலம் மங்களபுரம் குளத்தில் ரூ.1.82 கோடியிலும், பெருங்குடி மண்டலம் 191-வது வார்டு, ஜலாவுதீன் பேட்டை, வண்ணான் குட்டை குளத்தில் ரூ.3.56 கோடியிலும் புனரமைப்பு மற்றும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்படி பருவமழைக் காலங்களில் இந்த குளங்களில் அதிக அளவில் மழைநீரைச் சேமித்து சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர்த் தேக்கத்தைத் தவிர்ப்பதற்கும், மழைநீரை நிலத்தடியில் சேமிப்பதற்கும் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.