

சென்னை: பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக எம்எல்ஏவுமான சவுமியா அன்புமணி, பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அழிக்கப்பட்டால், அங்குள்ள பறவைகள், ஊர்வன வகைகள், நிலநீர் உயிரினங்கள், மீன்கள், மூலிகைகள், புற்கள், நீர்வாழ் தாவரங்கள், பூச்சிகள், நுண்ணுயிரிகள் உள்ளிட்டவை அழிவை சந்திக்கும். பள்ளிக்கரணை சதுப்பு நிலம், தண்ணீரை தேக்கி வைக்கும் நிலத்தடி நீரை சேமிக்க உதவும் வெள்ள நீர் வடிகாலாக பயன்படுகிறது. அந்த சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம்.
ஆனால், தமிழக அரசு அதற்கு மாறாக அங்கு தடுப்புச் சுவர் கட்டி, குடியிருப்பு பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க கான்கிரீட் போட்டு சுற்றுச் சுவர் தேவையில்லை.
வேலி மட்டும் போதுமானது. சதுப்பு நிலங்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். ராம் சார் நிலமாக இதனை வரையறை செய்து அறிவிக்கை வெளியிட வேண்டும்.
கடந்த ஆட்சியில் ஊழலுக்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாக மக்கள் கூறுகின்றனர். அதில் உண்மை தன்மையை ஆராய வேண்டும்.