

பொள்ளாச்சி: எல்-நினோ தாக்கத்தால் பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் தேங்காய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 60 சதவீத கொப்பரை உற்பத்தி களங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் வரும் ஜனவரி மாதத்தில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
தேங்காயில் இருந்து கொப்பரை, பவுடர் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில் எல்-நினோ தாக்கத்தால் தேங்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேங்காய் விலை உயர்ந்து வருகிறது. இதேபோல் கொப்பரை உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான கொப்பரை உற்பத்தி களங்கள் மூடப்பட்டுவிட்டன.
இதுகுறித்து கொப்பரை தேங்காய் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் வரை தேங்காய் சீசன் இருக்கும். தற்போது சீசன் முடிந்ததால் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளது. வழக்கமாக ஆடி மாதம் தென்னை மரங்களில் பாளைகள் வந்து விடும். ஆனால் தற்போது எல்-நினோ தாக்கத்தால் பாளைகள் உதிர்ந்து விடுகின்றன.
இதனால் தேங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை தென்னை மரங்களுக்கு முக்கியமானதாகும். ஆனால் தற்போது வரை 5 சதவீதம் அளவிற்கு தான் பருவமழை பெய்து உள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கம் காரணமாக வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படும்.
வெளிநாடுகளிலும் இதே நிலை உள்ளதால், அங்கிருந்தும் தேங்காய் இறக்குமதி செய்ய முடியாது. மேலும் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, முகூர்த்த நாட்கள் வருவதால் தேங்காய்க்கான தேவை அதிகரிக்கும். தேங்காய் விளைச்சல் குறைந்ததால் கொப்பரை உற்பத்தி களங்கள் 60 சதவீதம் மூடப்பட்டுவிட்டன. மீதமுள்ள 40 சதவீத களங்களும் இந்த (செப்டம்பர்) மாதத்துக்குள் மூடப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் வேலை இல்லாமல் வடமாநில தொழிலாளர்கள் மாற்று தொழிலுக்கும், சொந்த ஊருக்கும் திரும்பி செல்கின்றனர்.
தனியார் நிறுவனங்களுக்கு குடோன் வசதி உள்ளதால் கொப்பரை விலை குறைவாக இருக்கும்போது, விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து இருப்பு வைத்துவிட்டனர். மத்திய, மாநில அரசிடமும் கொப்பரை கையிருப்பு உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.156-க்கு விற்பனை ஆன கொப்பரை தற்போது ரூ.163 முதல் ரூ.170 வரையும், ஒரு டின் தேங்காய் எண்ணெய் ரூ.3,250-ல் இருந்து ரூ.3,600 வரையும் விலை உயர்ந்துவிட்டது.
தேங்காய் (கருப்பு) டன்னுக்கு ரூ.60 ஆயிரமும், பச்சை ரூ.54 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது. பொள்ளாச்சி பகுதி தென்னை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் மாதத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையும் கை கொடுக்கும். ஆனால் இந்த ஆண்டு எல்-நினோ தாக்கத்தால், பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.
வெப்பத்தின் காரணமாக தென்னை மரங்களில் இருந்து குரும்பைகள் உதிர்கின்றன. இதனால் அடுத்த ஆண்டில் தேங்காய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். சர்வதேச அளவில் தேங்காய் உற்பத்தி அதிகம் நடைபெறும் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா நாடுகளில் வெப்பத்தால் உற்பத்தி குறைந்து விட்டது. நம் நாட்டில் கர்நாடக மாநிலம் மற்றும் பொள்ளாச்சியில் தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.