

மேட்டூர் அருகே பண்ணவாடி பகுதியில் தென்பட்ட சின்ன கொண்டை ஆலா
மேட்டூர்: கடற்கரை மற்றும் கடல் சார்ந்த பகுதிகளில் வாழக்கூடிய சின்ன கொண்டை ஆலா உள்மாவட்டமான, மேட்டூர் அடுத்த பண்ணவாடிக்கு வருகை தந்துள்ளதை பறவை ஆர்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பண்ணவாடி பகுதியில் அரிய வகை பறவைகள் காணப்படுவதால், அவற்றை ரசிக்கவும், புகைப்படம் எடுக்கவும் ஏராளமான பறவை ஆர்வலர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சின்ன கொண்டை ஆலா பறவை பண்ணவாடி பரிசல் துறை பகுதிக்கு வந்ததை சிறகுகள் மற்றும் இயற்கை ஆராய்ச்சி கழகத்தைச் சேர்ந்த செந்தில்குமார், ஷாஜான், விவியன் ரிச்சர்ட்ஸ் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியது: “பண்ணவாடி ஒரு பல்லுயிர் பன்மயத் தலமாகும். வலசைப் பறவைகள் முதல் கடற்கரை வாழும் பறவைகள் என நீர்வாழ் பறவைகள் அனைத்தும் பண்ணவாடிக்கு வந்து குவியும்.
சின்ன கொண்டை ஆலா பெரும்பாலும் கடல் பகுதிகளில் உள்ள மீன்களை உணவாகக் கொள்ளும் பறவையினமாகும். பொதுவாக நீரின் மேல் பறந்து சரியான நேரத்தில் நீரில் பாய்ந்து மீனைப் பிடிப்பது பார்ப்பதற்காக அழகாக இருக்கும். பொதுவாக இப்பறவை கடற்கரை தீவுகள் மற்றும் மணல் பாறை தீவுகளில் கூட்டமாக இனப்பெருக்கம் செய்யும் தன்மை கொண்டது.
மற்றப் பறவைகளைப்போல் கூடு அமைத்து முட்டையிடுவதில்லை. மணல் பரப்பின்மேல் உள்ள சிறு பள்ளம் குழிகளில் முட்டையிட்டு அடை காக்கும். பொதுவாக இப்பறவை ஒன்று அல்லது இரண்டு முட்டையிடும்.
பண்ணவாடிக்கு பல பறவையினங்கள் வந்திருந்தாலும் சின்ன கொண்டை ஆலா முதல் முறையாக வந்ததை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கடற்பகுதியிலிருந்து இன்னொரு கடற்பகுதிக்கு உள்ள்நாட்டு வலசையாக செல்லும் பொழுது இடையில் பண்ணவாடிக்கு வந்திருக்கலாம்” என்றனர்.