

காயம்பட்ட நிலையில் சுற்றிவரும் பாகுபலி யானை.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக ‘பாகுபலி’ என அழைக்கப்படும் ஒற்றை ஆண் யானை சுற்றித் திரிகிறது.
சில நாட்களுக்கு முன்பு பிற யானைகளுடன் நடந்த மோதலில், பாகுபலி யானையின் வால் பகுதியில் குத்தப்பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வனத்துறையினர் யானையை கண்காணித்து வருகின்றனர். உரிய சிகிச்சை அளிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
பெரியநாயக்கன்பாளையம் வனச்சரத்துக்கு உட்பட்ட கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமிநகரில் சுற்றித்திரிந்த மற்றொரு காட்டு யானை அப்பகுதியில் வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகை பகுதிக்கு சென்றது.
இதனை பார்த்த தொழிலாளர்கள் தகரக்கொட்டகையை விட்டு வெளியேறினர். வனத்துறையினர் வந்து யானையை காட்டுக்குள் விரட்டினர். வனத்துறையினர் கூறும்போது, “கதிர்நாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளான மணிநகர், கணபதிநகர், கணபதி கார்டன், போஸ்டல் காலனி, ஆர்.வி.நகர், பூச்சியூர், வெற்றிவேலவா நகர், ரேணுகாபுரம் மற்றும் லட்சுமிநகர் பகுதிகளில் ஒற்றை யானையின் நடமாட்டம் வரும் நாட்களில் இருக்க வாய்ப்பிருக்கும் என்பதால், இரவு நேரங்களில் கூடுதல் கவனத்துடன் பொதுமக்கள் இருக்க வேண்டும்” என்றனர்.