ஆறு, ஏரி, குளம், சதுப்பு நிலங்களில் நாட்டு மீன்களை அழிக்கும் அமெரிக்க மீன்

ஆறு, ஏரி, குளம், சதுப்பு நிலங்களில் நாட்டு மீன்களை அழிக்கும் அமெரிக்க மீன்
Updated on: 
2 min read

புதுச்சேரி அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் ஏரி, குளம், ஆறுகளில் உள்ள மீன்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு அதிர்ச்சியான தகவல் தற்போது கிடைத்துள்ளது. நம் பாரம்பரிய நாட்டு மீன்களைத் தாண்டி உண்ணத் தகாத வெளிநாட்டு மீனும் வலைகளில் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

இதுபற்றி பல்லுயிர் பெருக்க மையத்தின் நிறுவனர், இயற்கை ஆர்வலர் பூபேஷ் குப்தா கூறியதாவது:

தென் அமெரிக்காவின் வெப்பமண்டலப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட கவசம் போன்ற எலும்புத் தகடுகளையுடைய ஒருவகை நன்னீர் மீன், சக்கர் மவுத் கெளுத்தி மீன் என அழைக்கப்படுகிறது.

இவ்வகை மீன்கள், மீன் தொட்டிகளில் உள்ள பாசிகள் (Algae) மற்றும் அடியில் தங்கும் மக்கிய உணவுப் பொருட்களை தின்று தொட்டியை இயற்கையாகவே சுத்தமாக வைத்திருக்க பெரிதும் உதவுகின்றன.

இவ்வாறு மீன் தொட்டிகளின் தூய்மைப் பணிக்கு பயன்படுத்திய பின்பு ஒரு கட்டத்தில் இதன் வளர்ச்சி அதிகரிக்கும் போது, இந்த மீன்கள் பிற பொது நீர்நிலைகளில் விடப்படுகின்றன. சமயங்களில் மீன் பராமரிப்பு நிலையங்களில் இருந்து தப்பித்தல் மற்றும் இணைக்கப்பட்ட நீர்வழிகள் வழியாகப் பரவுதல் ஆகியவற்றின் மூலம் இவைகள் ஏரி, குளம், குட்டைகள் போன்ற பொது நீர்நிலைக்கு வருகின்றன.

இவற்றால் நீர் நிலைகளில் உள்ள நமது பாரம்பரிய நாட்டு மீன்கள் அழியும் ஆபத்தில் உள்ளன. இவைகள் நாட்டு மீன்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல், சிறு நீர்வாழ் நன்மை விளைவிக்கும் பாசியினங்களையும் அழிக்கின்றன. சக்கர் மவுத் கெளுத்தி மீன் ஏரிகளில் உள்ள பறவைகளுக்கான சிறு மீன்களையும் உண்பதால், அவைகளும் பாதிப்படைகின்றன. இதனால் பறவைகளின் வலசைப் போதல் (migration) நிகழ்வில் பாதிப்பு ஏற்படுகிறது. புதுச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, இந்த சக்கர் மவுத் கெளுத்தி மீன்கள் காணப்படுகின்றன.

இந்த மீன் பார்ப்பதற்கு வரி குதிரை போன்ற வண்ணத்தைப் பெற்று இருக்கும். இது கிட்டத்தட்ட 2 அடி வரை வளரும் தன்மை உடையது. இந்த மீன்களின் இறப்பு விகிதம் மிகமிக குறைவு. இந்த மீன்களை நன்னீரில் வாழக்கூடிய எந்தவித உயிரினமும் குறிப்பாக பறவைகள் மற்றும் வேற எந்தவித உயிரினமும் சாப்பிடுவதில்லை. இந்த மீன்களை மனிதர்களும் உண்ணுவது கிடையாது.

இந்த மீன்கள் ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகளில் கரை ஓரங்களில் வலை போன்று அமைத்து, அதில் மிக பாதுகாப்பாக முட்டையிடுகிறது. இதனால் இந்த மீன்களின் இறப்பு விகிதம் மிகமிகக் குறைவாக உள்ளது.

சக்கர்மவுத் கெளுத்தி பெண் மீன் ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட முப்பதாயிரம் முட்டைகள் இடுகின்றன. இந்த மீன்களின் அசுர வளர்ச்சி நன்னீரில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய உள்நாட்டு மீன்களை கொஞ்சம் கொஞ்சம்அழித்து, அதன் வளர்ச்சியை தடை செய்கின்றன. உள்நாட்டு மீன்கள் இடக்கூடிய முட்டைகளையும் இந்த மீன்கள் உட்கொள்வதால் உள்நாட்டு மீன்களின் இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படுகிறது .

இதை கட்டுப்படுத்த நாம் முதலில் செய்ய வேண்டியது, மீன் தொட்டிகளில் விடப்படும் சக்கர்மவுத் கெளுத்தியை அருகில் உள்ள ஏரி குளம் குட்டைகளில் விடுவதை தவிர்க்க வேண்டும். அரசும் இவ்வகை மீன்களை, அலங்கார மீன் விற்பனையகங்களில் விற்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

ஆறு, ஏரி, குளம், சதுப்பு நிலங்களில் நாட்டு மீன்களை அழிக்கும் அமெரிக்க மீன்
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 கொடுத்து வாங்குவதா? - பழனிசாமி விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in