

அரூர்: கடத்தூர் ஒன்றியத்தில் வறண்டுள்ள ஏரிகளால் விவசாயம் பாதிப்படையும் வாய்ப்புள்ளதால், இப்பகுதியில் வறட்சியை போக்க புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் கடத்தூர் ஒன்றியப் பகுதி, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்த அபாயகரமான பகுதிகளில் ஒன்றாக பொதுப்பணித் துறையால் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடத்தூர் ஒன்றியப் பகுதியில் போதிய நீர் சேமிப்பு பகுதிகளாக அணைகளோ, தடுப்பணைகளோ, ஆறுகளோ இல்லாதது மட்டுமின்றி, நீர் மேலாண்மை குறித்த புரிதல் மக்களிடம் குறைவாக இருப்பதும் காரணமாக கூறப்படுகிறது.
நீர் சேமிப்புக்கேற்ற நிலவியல் அமைப்பு இல்லாததால் பருவ மழை காலத்தில் கிடைக்கும் நீரை மட்டுமே விவசாயத்துக்கு பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதியாக கடத்தூர் பகுதி உள்ளது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பின்னர் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவில் பெய்ததால் பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் சாரசரி அளவை விட பருவமழை குறைவாக பெய்ததால் பெரும்பாலான ஏரிகள் வறண்ட நிலையிலேயே உள்ளன.
பெரும்பாலான கிணறுகளில் நீர்மட்டம் பாதியளவிற்கு குறைந்து விட்டது. இதனால் வரவிருக்கும் கோடைகாலமான மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு முன்னதாகவே தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். எனவே, நிரந்தர நீராதாரத்தை உண்டாக்கிடும் வகையில் திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான இல.வேலுசாமி கூறியதாவது: கடத்தூர் ஒன்றியப் பகுதியில் நீராதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்களாக 4 திட்டங்களை பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் மூலம் ஏரிகளில் நீர் நிரப்புதல், தென் பெண்ணையாற்று நீரை நீரேற்றம் செய்தல், வேப்பாடி ஆற்றில் அணை கட்டி கால்வாய் மூலம் நீர்வழங்கல், பொதியன் பள்ளம் அணைக்கட்டு திட்டத்தை சீர் படுத்திட வேண்டும் என 4 திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், இந்த திட்டங்கள் குறித்து அரசு கவனம் செலுத்த வில்லை. கடத்தூரில் இருந்து வடக்கில் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் தென்பெண்ணையாறும், தெற்கில் 15 கிலோ மீட்டர் தொலைவில் பொம்மிடி அருகில் வேப்பாடி ஆறும் உள்ளது. ஆனால் ஆறுகள் இருந்தும் கடத்தூர் பகுதிக்கு பலனில்லை. எனவே, வறட்சியை போக்க புதிய திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும், என்றார்.