

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜாவில் உள்ள பார்சா ஈஸ்ட் மற்றும் காந்தா பாசன் நிலக்கரிச் சுரங்கத்தை, அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் 16 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு பசுமைப் பிரதேசமாக மாற்றியுள்ளது. இது 568 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.
ராஜஸ்தான் ராஜ்ய வித்யுத் உத்பாதன் நிகாம் நிறுவனத்துக்காக செயல்படும் இந்த சுரங்கத்தில் எடுக்கப்படும் நிலக்கரிக்கு பிந்தைய நில மறுசீரமைப்பு சாத்தியம் என்பதை இந்த திட்டம் நிரூபித்துள்ளது. 2030-க்குள் மரங்களின் எண்ணிக்கையை 40 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கு சுரங்கப் பணிகளுக்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் பதிலாக 40 உள்நாட்டு மரங்கள் நடப்படுகின்றன. இவற்றின் பிழைப்பு விகிதம் 88% ஆகும். இந்தச் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பைப் பாராட்டியுள்ள மத்திய நிலக்கரி அமைச்சகம், பொறுப்பான சுரங்கத் தொழிலுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இதுவொரு சிறந்த உதாரணம் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், அதானி நிறுவனம் 5 லட்சம் நாற்றுகளுடன் 3.5 ஹெக்டேரில் நர்சரி ஒன்றை அமைத்துள்ளது. அத்துடன், பல்வேறு வனக்கோட்டங்களில் 4,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் மாற்று காடமைப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளது.
இதற்காக சத்தீஸ்கர் அரசிடம் ரூ.259 கோடிக்கும் மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதிகளுக்கு இணங்கி செயல்படும் அதானி நிறுவனம், உள்ளூர் சமூகங்களின் மேம்பாட்டுக்கும் ஆதரவளித்து வருகிறது.