

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு என்.சி.சி (தேசிய மாணவர் படை) முன்னாள் உறுப்பினர்கள் (உதான்) இந்திய ராணுவத்தின் தென்னிந்திய தலைமையக பிரிவின் ஒத்துழைப்போடு ஏரிகள் புனரமைத்தல் மற்றும் பராமரித்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "நமது நகரம் முன் எப்போதையையும்விட மிக பாதிப்பை சந்தித்து வருகிறது. அதன் இயற்கை வளங்கள் எந்தவித கருணையும் இன்றி சுரண்டப்படுகிறது. அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுவது, கழிவுப் பொருட்களை எல்லா இடங்களிலும் மலை போல் குவிப்பது, தனி மனிதர்களின் பேராசையின் காரணமாக நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவது நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இது ஒரு புறம் என்றால் மறுபுறம் இயற்கை வளங்களை பாதுக்காக்க பராமரிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உதான் அமைப்பு "நம்ம ஏரி; நம்ம பொறுப்பு" என்ற புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. ஏரிகளை தூர்வாரி அதனுள் உள்ள கழிவுகளை அகற்றி ஏரிகளை மீட்டெடுக்கும் செயல்களின் வாயிலாக அவற்றினை பாராமரிப்பதின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புப்புணர்வை ஏற்படுத்த இந்திய ராணுவம், என்.சி.சி தமிழ்நாட்டுப் பிரிவு மற்றும் எக்ஸ்னோரா அமைப்பின் ஒத்துழைப்போடு ஈடுபட உள்ளது.
பல்லாவரம் ஏரியினை தூய்மைப்படுத்தும் பணியில் இருந்து இந்த சமூகப்பணி துவங்கவுள்ளது. நீர்நிலைகளில் படிந்து கிடக்கும் புதர்களை தூர்வாரி தேவையற்ற கழிவுகளை அவற்றினை மீட்டெடுக்கும் பணிகளை தொடர்ந்து செயல்படுத்த உள்ளோம்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வரும் 2, 3 மற்றும் 4 தேதிகளில் இந்திய ராணுவம், என்.சி.சி. உதான், என்.சி.சி. தமிழ்நாடு மற்றும் எக்ஸ்னோரா அமைப்பும் இணைந்து நீர்நிலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.