

பொள்ளாச்சி: ஆழியாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் கோட்டூர், ஆனைமலை, அம்பராம்பாளையம், மணக்கடவு வழியாக கேரளாவின் பாரதபுழா ஆற்றில் கலக்கிறது. ஆழியாறு ஆற்றில் கம்பாலபட்டி கூட்டுக் குடிநீர் திட்டம், மயிலாடுதுறை கூட்டுக் குடிநீர் திட்டம், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம் ஆகிய பேரூராட்சிகளின் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுதவிர அம்பராம்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்றும் நிலையத்தில் இருந்து 295 கிராமங்கள் பயன்பெறும் கூட்டுக் குடிநீர் திட்டம், ஆத்துப்பொள்ளாச்சி பகுதியில் குறிச்சி, குனியமுத்தூர், கிணத்துக்கடவு பகுதிகளுக்கான குடிநீர் திட்டம் ஆகியவை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளுக்கு மட்டும் அம்பராம்பாளையம் ஆழியாற்றில் இருந்து தினமும் சுமார் 91 லட்சம் லிட்டர் குடிநீர் எடுத்து, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதன்மூலமாக, பல லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆழியாறு ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதால் குடிநீரின் தரமும், சுவையும் குறைந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில், ஆழியாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொள்ளாச்சி நகர பாஜகவினர், சார் ஆட்சியர் பிரியங்காவிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து பாஜகவினர் கூறும்போது, "ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம் பேரூராட்சிகளில் இருந்து தினமும் 6 லட்சம் லிட்டர் கழிவுநீர் வெளியேறுகிறது. இந்த கழிவுநீர் ஆனைமலை வழியாக செல்லும் ஆழியாறு ஆற்றில் கலக்கிறது. இதனால் ஆற்றில் ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன.
பிளாஸ்டிக் குப்பை கொட்டப்படுவதாலும், இறைச்சி கழிவுகளை வீசி செல்வதாலும் தண்ணீர் மாசுபட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், ஆற்றில் இருந்து எடுக்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் மக்களுக்கு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. இதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.