பேரணாம்பட்டு அருகே தார் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்

பேரணாம்பட்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பேரணாம்பட்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated on
1 min read

பேரணாம்பட்டு: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ராஜக்கல் பகுதியில் தார் தொழிற்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வட்டாட்சியர் அலுவலகம் என மனு அளித்து வந்தனர்.

இருப்பினும், ராஜக்கல் பகுதியில் தார் தொழிற்சாலை அமைப்பதற்கான இயந்திரம் உள்ளிட்டவை நேற்று அங்கு கொண்டு வரப்பட்டன. இதனை அறிந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு அழிஞ்சிகுப்பம்-ஆம்பூர்-குடியாத்தம் இணைப்பு சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் தார் தொழிற்சாலை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாங்கள் பல மாதங்களாக போராடி வருகிறோம். எங்கள் போராட்டத்துக்கு தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில், தார் தொழிற்சாலை அமைக்க தேவையான இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இப் பகுதியில் தார் தொழிற்சாலை அமைக்க அனுமதிக்கமாட்டோம். மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு தார் தொழிற்சாலை அமைக்கும் முயற்சியை தடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதையடுத்து அங்கு வந்த மேல்பட்டி காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in