

ஓசூர்: சூளகிரி அருகே ஒற்றை யானை சுற்றி வருவதால், கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை சுற்றி வருகிறது. இது இரவு நேரத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறி வனப்பகுதியையொட்டியுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஒற்றை யானை நேற்று முன்தினம் இரவு சூளகிரி அருகே உள்ள செட்டிப்பள்ளி வனப்பகுதியில் தஞ்சம் அடைந்தது. யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் தொடர்ந்து வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, செட்டிப்பள்ளி கிராம மக்கள் வனப்பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லக் கூடாது. விளை நிலங்களுக்கு விவசாயப் பணிக்கும், காவல் பணிக்கும் செல்வதையும், தேவையின்றி வீட்டிலிருந்து இரவு நேரத்தில் வெளியில் வருவதையும் தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.