Published : 14 Oct 2017 10:35 AM
Last Updated : 14 Oct 2017 10:35 AM

1 ஏக்கருக்கு ரூ.1 லட்சம் லாபம்! - லட்சியப் பாதையில் ஏர் தூக்கிய ‘மிலிட்டரி!’

 

யற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாகக் கொங்கு மண்டல விவசாயிகளிடையே பேசும்போது, ‘இந்த ரெண்டு விஷயத்துலயும் கவனம் செலுத்தறது மிலிட்டரி கவுண்டர்தானுங்க. விவசாயிங்களைக் கைதூக்கி விடுறது அவரோட முழு நேர வேலைங்க’ என்கிறார்கள்.

ராணுவத்துக்கும் விவசாயத்துக்கும் என்ன சம்பந்தம்? நமக்குள் ஓடிய கேள்விக்குப் பதில் தேடிப் புறப்பட்டோம். விசாரித்ததில், சத்தமில்லாமல் பல சாதனைகளைச் செய்திருக்கிறார் ‘மிலிட்டரி கவுண்டர்’ என்று ஊர் மக்களால் அழைக்கப்படுகிற மாணிக்கம்.

உழவனின் நண்பன்

2011-ல் நொய்யல் ஆற்றில் கலக்கப்பட்ட சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு, ரூ.75 கோடி இழப்பீடு பெற்றுத் தந்ததில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மரவள்ளிக் கிழங்கு விவசாயிகள், உரிய விலை கிடைக்காமல் திண்டாடியபோது கிலோ ரூ.2.50-லிருந்து ரூ.7.50-க்கு விலையை உயர்த்த முயற்சிகள் மேற்கொண்டவர். இதனால் தற்போது சுமார் 1.60 லட்சம் ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு, ஏறத்தாழ 70 ஆயிரம் குடும்பங்கள் பயனடைந்துவருகின்றன.

மருத்துவக் குணம் நிறைந்த கண்வலிக் கிழங்கு (செங்காந்தள்) திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. ஏற்றுமதி வாய்ப்பு நிறைந்த கண்வலி விதைச் சாகுபடியில் ஈடுபட்ட பரமத்தி விவசாயிகள், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தில் சிக்கித் தவித்தனர். இதையடுத்து, 2014-ம் ஆண்டில் கிலோ ரூ.650-க்குக் கொள்முதல் செய்யப்பட்ட கண்வலி விதையை, ரூ.1,200-க்கும் குறைவாக யாரும் விற்கக் கூடாது, ஒருவேளை விற்க நேர்ந்தால் அதைத் தானே கொள்முதல் செய்வதாக உறுதிஅளித்தார் மாணிக்கம். இதையடுத்து, விலை சீரடைந்தது. தற்போது 5 ஆயிரம் ஏக்கரில் கண்வலி விதை சாகுபடி செய்யப்பட்டு, 4 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகப் பயனடைகின்றன. தற்போதுவரை, விலை ஏற்றத்திலேயே உள்ளது.

‘மிலிட்டரி’ பின்னணி

அவரைச் சந்தித்தபோது கேட்ட முதல் கேள்வியே, ‘மிலிட்டரியில நீங்க என்னவா இருந்தீங்க?’ என்பதுதான்.

“நாங்க பாரம்பரியமா விவசாயக் குடும்பம்தான். சின்ன வயசுலேயே ஏர் ஓட்டக் கத்துக்கிட்டேன். கோவை பி.எஸ்.ஜி.யில் 1973-ல் பி.இ. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் முடித்தேன். அமெரிக்காவுல வேலை கிடைச்சும், நான் போகலை. நம்ப படிப்பு இந்தியாவுக்குப் பயன்படணும்னு கருதி, ‘மேக் இன் இந்தியா’ங்குற கம்பெனியைத் தொடங்கினேன். நம் நாட்டுல உற்பத்தியாகாத பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்ய நினைத்து, மின்சாரம் சம்பந்தமான இயந்திரங்களை உற்பத்தி செய்தோம்.

இப்போ தொழிற்சாலைகள் மட்டுமின்றி, ராணுவத்துக்கும் எங்களோட பொருட்களை சப்ளை செய்யறோம். குறிப்பா, விமானங்களுக்கான பவர் கண்ட்ரோல் சிஸ்டம், ராணுவம், விமானப் படைக்குத் தேவையான பல பொருட்களைத் தயாரிச்சுக் கொடுக்கிறோம். புதுசு புதுசா பல பொருட்களைக் கண்டுபிடிக்க, தனி யூனிட்டுகளை அமைத்துள்ளோம். ராணுவத்துக்குப் பொருட்களை சப்ளை செய்யுறதால என்னை ‘மிலிட்டரி கவுண்டரு’ன்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க” என்று தன் அடைமொழிக்கான பின்னணியைச் சொன்னவர், விவசாயம் தொடர்பான தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

லாபமான தொழிலாக…

“இது ஒரு பக்கமிருந்தாலும், விவசாயத்தையும் நான் கைவிடலை. 6 வருஷத்துக்கு முன்னாடி திருச்செங்கோடு ஆனங்கூர் பகுதியில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குப் போனப்ப, நிலக்கடலை பயிர் காஞ்சு கிடந்ததைப் பார்த்து வேதனை அடைஞ்சேன். அந்த நிமிஷமே முடிவெடுத்து, என்னோட ‘மிலிட்டரி’ தொழிலை மகன்கிட்ட ஒப்படைச்சேன். இனி முழு நேரமும் இயற்கை விவசாயம் மட்டும்தான் நம்ம வேலைன்னு தீர்மானிச்சேன்.

விவசாயத்தை லாபமான தொழிலா மாத்தினாதான், விவசாயிங்க பிழைக்க முடியும். ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.1 லட்சம் நிகர லாபம் கிடைக்கணும். அதுக்கான உத்திகளைக் கண்டுபிடிச்சி, விவசாயிங்க கிட்டக் கொண்டுபோய்ச் சேர்க்கிறோம்.

பாரம்பரிய நெல்லுல முக்கிய ரகமான ‘மாப்பிள்ளைச் சம்பா’ பயிரை குறைஞ்ச தண்ணீர், அளவான இயற்கை உரத்தைப் பயன்படுத்தி, அதிக மகசூல் எடுக்கலாம். இதுக்கான தொழில்நுட்பம், உரப் பரிந்துரைகள் கொண்ட நெல் சாகுபடிக் குறிப்பேட்டைத் தயாரிச்சு வழங்குறோம். ஆயிரக்கணக்கான விவசாயிகள்கிட்ட இதைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு.

ஒரு மூட்டை ரூ.2,400!

அது மட்டும் இல்லை. இயற்கை முறையில் நெல் உற்பத்தி செய்யுறது தொடர்பாக, எங்க நிறுவனம் மூலமா, விவசாயிகளுடன் கூட்டு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம். இதுல, எப்படிச் சாகுபடி செய்யணும், என்ன இடுபொருள் பயன்படுத்தணும், தொழில்நுட்பப் பயன்பாடு தொடர்பா நாங்க ஆலோசனை கொடுப்போம். மேலும், மானிய விலையில் இடுபொருட்களும் வழங்கப்படும். எந்த ரசாயனமும் பயன்படுத்தக் கூடாது.

அப்படி விளைவிக்கிற ஒரு கிலோ நெல்லை ரூ.32-க்கு, அதாவது ஒரு மூட்டை நெல்லை (75 கிலோ) ரூ.2,400-க்கு எங்க நிறுவனமே கொள்முதல் செய்யும். இந்த விலையில் அரசு, தனியார் யாருமே கொள்முதல் செய்ய மாட்டாங்க. இந்தத் திட்டத்துல ஏராளமான விவசாயிங்க இணைஞ்சிருக்காங்க.

மேலும், விழுப்புரம் மாவட்டத்துல 110 ஏக்கரில் மாப்பிள்ளைச் சம்பா சாகுபடி செய்யவும், கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் வேர்க்கடலை சாகுபடியை அதிகரிக்க குஜராத்திலிருந்து 500 மூட்டை வேர்க்கடலை விதையை வாங்கி வந்தும், கரும்பு சாகுபடி தொழில்நுட்பத்துல சில மாறுதல்களைச் செய்து ஒரு ஏக்கரில் 9 மாதத்தில் 90 டன் மகசூல் எடுக்கும் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுத்தும், விவசாயிகளுக்கு வழிகாட்டுறோம். இப்படிப் பல வழிகள்ல போய்க்கிட்டிருக்கு நான் செலுத்துற ஏர்!” என்று முடிக்கிறார் மாணிக்கம்.

இவர் மக்கள் ‘மிலிட்டரி!’

மாணிக்கம் தொடர்புக்கு: 0422 - 4305074


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x