Published : 25 May 2023 02:46 PM
Last Updated : 25 May 2023 02:46 PM

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை நிறுத்துக: தமிழக அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்

செறிவூட்டப்பட்ட அரிசி

சென்னை: செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடி 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்திய மக்களுக்கு இனிமேல் சத்துமிகுந்த செறிவூட்டப்பட்ட அரிசியைப் பொது வழங்கல் திட்டம் போன்ற அரசுத் திட்டங்களின் வழியாகக் கொடுக்க உள்ளதாகப் பேசினார். அப்போதிலிருந்து இப்போது வரை அதற்கான காரணங்களைப் புள்ளி விவரங்களுடன் அரசுத் தரப்பில் இருந்து யாரும் வெளியிடவில்லை.

நிதி ஆயோக், உணவு மற்றும் பொதுவழங்கல் துறை, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர அதிகாரத்துறை (FSSAI) ஆகிய யாரும் ஏன் இந்த அரிசியை இந்திய மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற தரவுகளை வெளியிடவில்லை. அதிலும் எந்த அளவு சத்து இரசாயனங்களை யாரிடமிருந்து இறக்குமதி செய்யப்போகிறோம் என்பதைக்கூட வெளியிடவில்லை.

தற்போது வரை 137.71 லட்சம் டன் செறிவூட்டப்பட்ட அரிசியை ஒன்றிய அரசு விநியோகித்துள்ளது. இந்த செறிவூட்டப்பட்ட அரியால் உண்மையாகவே நன்மை விளைகிறதா? பாதிப்பு ஏதேனும் உள்ளதா? என்பது குறித்த எந்தத் தகவலையும் மத்திய அரசு பொதுவெளியில் வைக்காததன் காரணம் தற்போது வெளியாகியுள்ளது. காரணம் என்னவெனில் இந்த செறிவூட்டப்பட அரிசியால் போதுமான பலன் இல்லை, இதன் தாக்கம் குறித்த முன்னோட்ட ஆய்வுகள் வெற்றியடையவில்லை.

செறிவூட்டப்பட்ட அரிசி பலனளிப்பதற்குப் பதிலாக உட்கொள்பவர்களின் உடல்நிலையில் குறிப்பிட்ட சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என மத்திய அரசின் நிதித்துறை, நிதி ஆயோக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம்(ICMR)உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் அரசை எச்சரித்துள்ளன. ஆனால், இந்த எச்சரிக்கைகள் எதையும் பொருட்படுத்தாமல் இந்தியாவின் விளிம்புநிலை மக்களை சோதனை எலிகளாக்கி செறிவூட்டப்பட்ட அரிசியை நாடு முழுவதும் விநியோகித்துள்ளது மோடி அரசு.

இந்த செறிவூட்டப்பட்ட அரிசி ஏதோ வடமாநிலத்தில் மட்டும் விநியோகிக்கப்படவில்லை. தமிழகத்திம் பல்வேறு அரசுத் திட்டங்களின் வாயிலாக ஏற்கெனவே பொதுமக்களை அடைந்துவிட்டது. தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2023 – 2024ன் படி முதற்கட்டமாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம், மதிய உணவுத் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களுக்கு 01.10.2020 முதல் 31.03.2022 வரை செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள அனைத்து முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களுக்கும் 01.12.2022 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை உட்கொண்டவர்கள் தலசீமியா, சிக்கிள் செல் அனிமியா உள்ளிட்ட பாதிப்பைக் கொண்டவர்களாக இருந்தால் அரசே அவர்களுக்குத் தெரியாமல் அவர்களை மெல்ல மெல்ல கொல்கிறது என்றே அர்த்தம். அரிசியைப் பழைய சோறாக்கிச் சாப்பிட்டால், அல்லது நீராகாரமாக்கிக் குடித்தால், ஏன் கேப்பைக் கூழ், கம்பங் கூழ் குடித்தால் வைட்டமின் பி-12 சாதாரணமாகக் கிடைக்கும் என அரசு உணவு ஆராய்ச்சி நிறுவனங்கள் கூறுகின்றன.

பொதுவாகத் தீட்டாத அரிசியில் இரும்புச்சத்து உண்டு, அதிலும் செந்நெல் யாவற்றிலும் இரும்புச்சத்து இன்னும் கூடுதல் உண்டு, கருப்பு நெல்லிலும் உண்டு. கருங்குறுவை என்ற அரிசியில் மற்ற அரிசியை விட ஆறு மடங்கு இரும்பச்சத்து கூடுதலாக உள்ளதை ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாகக் காடியாக (நொதிக்க வைத்து) மாற்றும்போது கருப்பு அரிசிகளில் மிகச் சிறப்பாக இரும்புச்சத்து கிடைக்கிறது. அதனால் தான் சித்த மருத்தவர்கள் கருங் குறுவைக் காடியை ஒரு துணைமருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

இப்படி உள்ளூரில் கிடைக்கும் உணவுகளைக் கொண்டே பல்வேறு வகையான சத்துகளை நாம் பெற்றுக்கொள்ள வழிகள் இருக்கும்போது எவ்வித அடிப்படை அறிவியல் ஆதாரங்களுமின்றி பிரதமர் மோடியின் விளம்பர மற்றும் வணிக வெறிக்காக தமிழக மக்களை நமது அரசாங்கமே பலியிடக் கூடாது. உடனடியாக தமிழக அரசு பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை உருவாக்கி ஏற்கெனவே செறிவூட்டப்பட்ட அரிசியை உட்கொண்ட மக்களிடம் மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மாநில அரசுத் திட்டங்கள் அனைத்திலும்கீழ் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x