

மேட்டூர்: மேட்டூர் அருகேயுள்ள செக்கானூர் கதவணையில் 0.50 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைத்து பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கும், அனல் மின்நிலையம் உள்ளிட்ட தொழிற் சாலைகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் கதவணையில் பராமரிப்பு பணி காரணமாக, தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் பூலாம்பட்டி - நெரிஞ்சிப்பேட்டை கதவணைக்கு திறக்கப்பட்டது. இந்த பராமரிப்பு பணி 20 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இந்நிலையில் நேற்று டன் கணக்கில் மீன்கள் இறந்து செக்கானூர் பகுதி ஆற்றங் கரையின் இருபுறங் களிலும் ஒதுங்கின. இதனால் காவிரி கிராஸ், நவப்பட்டி ,செக்கானூர் ஆகிய இடங்களில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் முழுவதும் திறந்து விடப்பட்டதால், கடும் வெப்பம் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மீன்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மேட்டூர் அணையைச் சுற்றிலும் உள்ள ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால் மீன்கள் இறந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றுநீரை பயன்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். இறந்து போன மீன்களை சிலர் கூடைகளில் அள்ளிச் சென்று காய வைத்து கருவாடாக விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
‘இறந்து போன மீன்களை அப்புறப்படுத்த வேண்டும். நீர் மாதிரியை ஆய்வு செய்து மீன்கள் இறப்புக்கான காரணம் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.