Published : 07 Oct 2017 11:39 AM
Last Updated : 07 Oct 2017 11:39 AM

‘இனிப்பு’க்கு நூறு வயது!

ஆற்றோரம் காணப்படும் நாணல்களையும், நாம் ருசிக்கும் அந்தக் கால நாட்டுப்புறக் கரும்பையும் பயன்படுத்திப் பெரிய அளவில் சர்க்கரை உற்பத்திக்குக் காரணியாக விளங்கும் ஒட்டுரகக் கரும்பு உருவாகி நூறு வருடங்கள் ஓடிவிட்டன! அதற்கான விழாவைக் கொண்டாடுகிறது கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம். இந்த ஒட்டுரகத்தின் வரலாறும் கரும்பாக இனிக்கிறது.

முன்பு இந்தியாவில் சாதாரண நாட்டுக் கரும்பு வகைகளையே பயிரிட்டு வெல்லம், கரும்புச் சர்க்கரை போன்றவற்றைத் தயாரித்துவந்தார்கள். அந்த நேரத்தில் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியைச் சேர்ந்த கரும்பு இனப்பெருக்க மையம் ஒரு வித ஒட்டுரகக் கரும்பை உருவாக்கிவந்தது. அந்த ரகக் கரும்புகள் நம் தென்னிந்தியாவுக்கு வந்து ஓரளவு மகசூலும் தர, வடஇந்தியப் பகுதிகளில் அது எதிர்பார்த்த அளவு மகசூலைத் தரவில்லை. எனவே, அங்கும் மகசூல் கிடைக்கும்படியான ஒட்டுரகங்களை உருவாக்கும் நோக்கத்தில் 1912-ல் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட்டது.

நாணலும் நாட்டுக் கரும்பும்

கரும்பு இனப்பெருக்கத்துக்குக் குறிப்பிட்ட பருவநிலையும் மண்வாகும் தேவை. அது கோவையில் இயல்பாகக் கிடைத்ததால் அங்கேயே மையம் அமைத்து ஆங்கிலேயரான பார்பரும், தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ். வெங்கட்ராமனும் ஆராய்ச்சியில் இறங்கினார்கள். இருவரின் தலைமையில் இயங்கிய ஆராய்ச்சிக் குழு, ஆற்றோரம் வளர்ந்து நிற்கும் நாணல்களையும், நாட்டுக் கரும்பையும் கலப்பினமாகக்கொண்டு ஓர் ஒட்டுரகக் கரும்பை உருவாக்கினார்கள். அதுவரை ஒரு ஏக்கருக்கு வெறும் நான்கு டன் வரையே மகசூல் தந்துகொண்டிருந்தது நாட்டுக் கரும்பு. புதிய ஒட்டுரகத்தை வடஇந்தியப் பகுதிகளில் விளைவித்ததில், ஏக்கருக்கு 12 டன்னுக்கு மேல் மகசூல் கிடைத்தது.

இதனால் வட மாநிலங்களில் இந்த ஒட்டுரகக் கரும்பு உற்பத்தி பெருகியது. இந்தக் கண்டுபிடிப்பு 1918-ம் ஆண்டில் சாத்தியமானது. இந்த ஒட்டுக் கரும்பு ரகம் கோவையில் கண்டுபிடிக்கப்பட்டதால் CO 205 (கோ 205) என்று பெயரிடப்பட்டது. இதை முன்வைத்துப் புதிய புதிய ஒட்டுரகக் கரும்புகளை உருவாக்க ஆரம்பித்தது இந்த நிறுவனம். அப்படி இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஒட்டுரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சமீபத்திய கண்டுபிடிப்பாக CO 0238 எனும் ரகம் 2009-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதை உருவாக்கியவர் தற்போது இந்நிறுவனத்தின் இயக்குநராக இருக்கும் பக்ஷிராம்.

நூறாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஒட்டுரகம் CO 205 சாதாரண கரும்பைவிட ஏக்கருக்கு 12 டன்னுக்கு மேல் மகசூல் கொடுத்தது என்றால், இப்போது உருவாக்கப்பட்டுள்ள CO 0238 ரகம் ஏக்கருக்கு 40 டன் முதல் 100 டன் வரை மகசூல் தருகிறதாம். இதனால் இந்த ரகம் உத்தரபிரதேசத்தில் மட்டும் கரும்பு விளையும் பரப்பளவில் 48 சதவீத இடத்தைப் பிடித்திருக்கிறது.

முன்னோர் இட்ட மூலவித்து

இந்தச் சாதனைகளுடன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது இந்நிறுவனம். இதுகுறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் பக்ஷிராம்:

“நாணலையும் சாதாரண ரகக் கரும்பையும் இணைத்து ஒரு ரகத்தை உருவாக்க வேண்டும் என்று அந்தக் கால ஆராய்ச்சியாளர்களுக்குத் தோன்றியது எவ்வளவு பெரிய விஷயம்? அவர்கள் போட்ட மூல விதைதான், இந்த அளவுக்கு கண்டுபிடிப்புகள் வளரக் காரணமாக இருந்துள்ளது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்புவரை நம் நிறுவனத்தின் ஆராய்ச்சியில் உருவான ஒட்டுரகங்களை 28 நாடுகள் பயன்படுத்தின. இனக் கலப்பினம் செய்து முதன்முதலாக உருவாக்கப்பட்ட ஒட்டுரகமான கோ 205, கடந்த 1918–ம் ஆண்டில் வட இந்தியாவுக்காக வணிகரீதியாக வெளியிடப்பட்டது. இந்த ரகத்தின் வருகை, அந்த நேரத்தில் கரும்பு மகசூலில் தலைகீழ் மாற்றத்தை உருவாக்கியது.

தற்போது பெருமளவு புழக்கத்தில் உள்ள கலப்பினம் CO 86032. இது பழைய ரகம். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இந்த ரகம் மட்டும் 10 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. பொதுவாகக் கரும்பினத்தில் மகசூல், சர்க்கரைச் சத்து, நோய் எதிர்ப்பு ஆற்றல், வறட்சியைத் தாக்குப்பிடிக்கும் தன்மை, பருவநிலை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு உருவாக்கப்படுகிறது,” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x