

லண்டன்: உச்சபட்ச வெப்ப நிலையை பூமி சில ஆண்டுகளில் சென்றடையும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக பூமியின் வெப்ப நிலை 1.1 டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளது. 2040-ஆம் ஆண்டுக்குள் பூமியின் வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸாக அதிகரித்துவிடும் என்றும், வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸை தாண்டினால் மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டு மனித இனங்களும், பிற உயிரினங்களும் வாழ முடியாத கடினமான சூழல் உருவாகிவிடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 2027-ஆம் ஆண்டுக்குள் 1.6 டிகிரி செல்சிஸ் வெப்ப நிலையை பூமி அடைவதற்கு 66% வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் 1.5 டிகிரி செல்ஸியஸ்தான் உலகளாவிய காலநிலை மாற்ற தாக்கத்தின் அடையாளமாக மாறியுள்ளது. 2015 பாரீஸ் உடன்படிக்கையின் கீழ் உலக வெப்பநிலை உயர்வை 1.5C ஆகக் கட்டுப்படுத்த முயற்சிகளைத் தொடர நாடுகள் ஒப்புக்கொண்டன.ஆனால், எந்த ஆக்கபூவர்மான நடவடிக்கைகளையும் உலக நாடுகள் எடுக்கவில்லை.
இதனிடையே, மனித நடவடிகைகளால் பூமியின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னதாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸை பூமி நெருங்கும் வாய்ப்பு 20% இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வெப்ப நிலை உயரும் வாய்ப்பு கடந்த ஆண்டு 50% ஆக அதிகரித்தது, இப்போது அது 66% ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர். 1.5 டிகிரி செல்ஸியஸ் என்பது உலகின் வெப்பநிலையின் நேரடி அளவீடு அல்ல, ஆனால் நீண்ட கால உலகளாவிய சராசரியுடன் ஒப்பிடும்போது பூமி எவ்வளவு வெப்பமடைந்துள்ளது அல்லது குளிர்ச்சி அடைந்துள்ளது என்பதற்கான குறிகாட்டியாகும். அதன்படி, 2 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்கு பூமி செல்லும்போது அது ஆபத்தான நுழைவாயிலாகவே கருதப்படும்.
தொடர்ந்து அதிகரித்து வெப்ப நிலையால் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை வரம்பை மீறுவதற்கான உறுதியான வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இது குறித்து கால நிலை மாற்ற நிபுணரும் பேராசிரியருமான பேராசிரியர் ஆடம் ஸ்கேஃப் கூறும்போது "பூமியின் ஆண்டு சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் என்ற நிலையை அடையும் நிலையில் இருக்கிறோம். மனித வரலாற்றில் நாம் அதிகபட்ச வெப்ப நிலையில் இவ்வளவு நெருக்கமாக இருப்பது இதுவே முதல் முறை" என்று கூறினார்.