

மதுரை: மதுரையில் சாலைகள் விரிவாக்கத் துக்காக ஆயிரக்கணக்கான மரங் கள் வெட்டப்பட்டதால் நகரின் பெரும்பாலான சாலைகள் பாலைவனம் போல காணப்படுகின்றன. தற்போது கோடைவெயில் சுட்டெரிப்பதால், மக்கள் சாலை களில் நடமாட முடியாமல் தவிக்கின்றனர்.
கடந்த காலத்தில் சாலைகளின் இருபுறங்களிலும் வழிநெடுகிலும் பசுமைப் போர்வை போல மரங்கள் நெருக்கமாக இருந்தன. ஆனால், தற்போது இருவழிச் சாலைகள், நான்கு வழிச் சாலைகள், ஆறு வழிச் சாலைகள் மற்றும் எட்டு வழிச்சாலைகள் கூட வந்துவிட்டன. இந்த சாலைகளுக்காக சாலையோர மரங்கள் ஆயிரக்கணக்கில் வெட்டி அகற்றப்பட்டன.
அவ்வாறு மரங்களை வெட்டும்போது புதிதாக மரங்களை நட்டு வளர்ப்போம் என நெடுஞ்சாலைத் துறையினர் உறுதி அளித்தனர். ஆனால், அந்த உறுதியை நிறைவேற்றாததால், தற்போது சாலைகள் வெட்ட வெளியாகக் காணப்படுகின்றன.
மதுரை போன்ற வெப்ப மண்டல மாவட்டங்களில் தன்னார்வ அமைப்பினர் சிலர் ஆங்காங்கே மரக்கன்றுகளை நட்டாலும், அவற்றுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிப்பதில் சிக்கல் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் மதுரை கே.கே.நகர் முதல் ஒத்தக்கடை வேளாண் கல்லூரி வரையும், மாவட்ட நீதிமன்ற சாலை, ஆனையூர் சாலை, நத்தம் சாலை, வைகைக் கரை சாலைகள், பை-பாஸ் சாலை போன்ற நகரின்முக்கிய வழித்தடங்களில் இருந்தஆயிரக்கணக்கான மரங்கள்அனைத்தும் சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்டன.
ஒருபுறம் சாலை விரிவாக்கத்துக்காகவும், மறுபுறம் மின்கம்பங்கள், சாலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும் கூறி மரங்களை வெட்டி அகற்றினர்.
நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலையை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. வனத்துறையிடம் இருந்து புங்கன், மே பிளவர், புளி, வேம்பு, போன்ற மரக்கன்றுகள் பெறப்பட்டு நடப்படுகின்றன. ஆனால் நட்டதோடு சரி, அவற்றை பராமரிக்காததால் மரக்கன்றுகள் கருகி, தற்போது மதுரை சாலைகள் அனைத்தும் பாலைவனம் போல காணப்படுகின்றன. மரங்கள் குறைந்ததால் மதுரை மாவட்டத்தில் மழை அளவும் வெகுவாக குறைந்து விட்டது.
தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் தகிக்கும் சாலைகளில், வெயிலுக்கு ஒதுங்கக் கூட நிழல்தரும் மரங்களின்றி மக்கள்நடமாட முடியாமலும், இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமலும் தவிக்கின்றனர்.
இனிமேலாவது, மதுரை நகர் சாலைகளில் மரங்களை வளர்ப்பதை நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் முன்னெடுக்க வேண்டும். மரங்கள் இல்லாத சாலைகளை கண்டறிந்து அங்கு பொதுமக்கள், தன்னார்வலர்களையும் இணைத்து மரக் கன்றுகளை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பசுமை நெடுஞ்சாலை கொள்கை என்ன ஆனது?
வனத்துறை ரேஞ்சர் கிரிதரன்கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம், மாநில நெடுஞ்சாலைத் துறை பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் சாலைகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வனத்துறையுடன் ஒப்பந்தம் மேற்கொள்வர். அதன் அடிப்படையில், நாங்கள் பல்வகை நிழல் தரும் மரக்கன்றுகளை கொடுப்போம். அந்த மரக்கன்றுகளை சாலையோரங்களில் நட்டு பராமரித்து வளர்த்தும் கொடுப்போம். சில சமயங்களில் மரக்கன்றுகள் மட்டும் வழங்கு வோம்.
மரங்களை வளர்த்து பராமரிக்க தனியாருக்கு உரிமம் வழங்குவர். அதுபோல், விவசாயிகளுக்கு நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் இலவசமாக வேம்பு, தேக்கு, இலுப்பை, வாகை உள்ளிட்ட பல்வேறு மரங்களை வளர்த்து கொடுப்போம். மரங்கள் தேவைப்படுவோர் எங்களை (9750842308) அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.
சாலையோரங்களில் நிழல் தரும் மரங்களை வளர்க்க தேசியநெடுஞ்சாலைத்துறை ஆணையம் பசுமை நெடுஞ்சாலை கொள்கையை கடைப்பிடிக்கிறது. இந்த திட்டத்தில் நெடுஞ்சாலை அமைக்க ஒதுக்கும் நிதியில் ஒருசதவீதம் மரம் நடுதல், பராமரித்தல் ஆகியவற்றுக்காக ஒதுக்கப்படுகிறது.
இப்பணிகளில் உள்ளூர் மக்கள் ஈடுபடுத்தப்பட்டுவேலைவாய்ப்பு பெறுவர். மரங்களின் பயன்களை உள்ளூர் மக்களே பயன்படுத்திட வகை செய்யப்படுகிறது. ஆனால், இந்த திட்டங்கள் சரியான கண் காணிப்பு, பராமரிப்பு இன்றி உள்ளதாலேயே சாலைகள் பாலை வனமாக காணப்படுகின்றன.