ஹெலிகாப்டர் சுற்றுலாவால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது: அமைச்சர் கா.ராமச்சந்திரன் திட்டவட்டம்

உதகை தாவரவியல் பூங்கா காட்சி மாடத்தில் மலர் தொட்டிகள் அடுக்கும் பணியை தொடங்கிவைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்.
படம்: ஆர்.டி.சிவசங்கர்
உதகை தாவரவியல் பூங்கா காட்சி மாடத்தில் மலர் தொட்டிகள் அடுக்கும் பணியை தொடங்கிவைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன். படம்: ஆர்.டி.சிவசங்கர்
Updated on
1 min read

உதகை: உதகையில் கோடை சீசனை முன்னிட்டு நடத்தப்படும் ஹெலிகாப்டர் சுற்றுலாவால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

உதகை அரசு தாவரவியல்‌ பூங்காவில்‌ 125-வது மலர்காட்சி வரும்‌ 19-ம் தேதி முதல்‌23-ம் தேதி வரை நடக்கிறது. இவ்வாண்டு 35,000 மலர்‌ தொட்டிகளில்‌ 325 வகையான மலர் ரகங்கள்‌ சுற்றுலா பயணிகளின்‌ பார்வைக்காக அடுக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பூங்காவில்‌ நடவு செய்யப்பட்டுள்ள 5.5 லட்சம்‌ மலர்‌ நாற்றுகளிலும் பூக்கள் மலர்ந்து அழகாக காட்சியளிக்கின்றன.

மலர் தொட்டிகளை மலர்காட்சித் திடலில்‌அடுக்கி வைக்கும்‌ பணியை மாவட்ட ஆட்சியர்‌ சா.ப.அம்ரித் முன்னிலையில்‌ சுற்றுலாத்துறை அமைச்சர்‌ கா.ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் கூறும்போது, ‘‘பூங்காவில் மலர் கண்காட்சிக்காக புல் மைதானங்களில் தயார்படுத்தப்பட்ட பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கி கண்களுக்கு விருந்து படைக்கின்றன.

இந்த ஆண்டு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். உதகை தீட்டுக்கல் பகுதியிலிருந்து ஹெலிகாப்டர் சுற்றுலா வரும் 13-ம் தேதி தொடங்கும். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. நீலகிரி மாவட்டத்துக்கு பல முக்கியஸ்தர்கள் ஹெலிகாப்டர் மூலம் தான் வருகின்றனர். ரோப் கார் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. நிலம்கையகப்படுத்தப்பட்டதும், அதற்கான பணிகள் தொடங்கும்’’ என்றார்.

அமைச்சர் பூங்காவுக்கு வந்தபோது தோட்டக்கலை துறை ஊழியர்கள் தங்களுக்கு கடந்தமாதம் ஊதியம் வழங்கப்படவில்லை என்று முறையிட்டனர். இதையடுத்து, “தொழில்நுட்பக் கோளாறு இருப்பதால் இரண்டு நாட்களுக்குள் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் உறுதி அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in