

ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் ஜீரஹள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ‘கருப்பன்’ எனப் பெயரிடப்பட்ட யானை, கடந்த ஓராண்டாக விளைநிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தியது.
இந்த யானை தாக்கியதில் இரு விவசாயிகள் உயிரிழந்தனர். கடந்த மாதம் 17-ம் தேதி மயக்க ஊசி, கும்கி யானைகள் உதவியுடன் யானை பிடிக்கப்பட்டு அந்தியூரை அடுத்த தட்டக்கரை வனப்பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில் நேற்று முன் தினம் அங்கிருந்து வெளியேறிய யானை, கோபியை அடுத்த சஞ்சீவராயன் கோயில் வழியாக வரப்பள்ளம் பகுதிக்கு வந்தது. அடசபாளையம் வாழைத்தோட்டத்தில் புகுந்த யானை, சித்தேஸ்வரன் (48) என்பவரைத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
கும்கி யானைகள் வரவழைப்பு: இந்நிலையில், நேற்று மாலை முதல் தொட்டகொம்பை பகுதியில் உள்ள கரும்புக்காட்டில் யானை இருப்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர். இதையடுத்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் வகையில், ஈரோடு, தருமபுரியில் இருந்து வந்த கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர் அப்பகுதியில் காத்திருக்கின்றனர்.
இப்பணிக்கு உதவியாக முதுமலையில் இருந்து இரு கும்கி யானைகள் மீண்டும் வரவழைக்கப்பட்டன. இன்று (6-ம் தேதி) காலை, கரும்புக்காட்டில் இருந்து யானை வெளியேறும் போது அதைப் பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
வனத்துறை திட்டம்: தாளவாடி வனப்பகுதியில் இருந்து பிடிக்கப்பட்ட கருப்பன் யானை, தட்டக்கரை பகுதியில் விடப்பட்ட நிலையில், அது கர்கேகண்டி வழியாக கர்நாடக வனப்பகுதிக்கு செல்லும் என தமிழக வனத்துறையினர் நினைத்தனர். ஆனால், அது மீண்டும் உணவுக்காக அந்தியூருக்கு வந்ததால் தற்போது மீண்டும் அதைப் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே மூன்று உயிரிழப்புகளுக்கு காரணமான ‘கருப்பனை’ யானை பிடிபட்டால், அதை வேறு வனப்பகுதியில் விட முடியாது என்பதால், கும்கியாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடங்கி யுள்ளனர்.