ஆனைமலை அருகே வனத்துறை ரோந்து வாகனத்தை தாக்கிய மக்னா யானை - 6 பேர் காயம்; 3 கும்கிகள் வரவழைப்பு

ஆனைமலை அருகே வனத்துறை ரோந்து வாகனத்தை தாக்கிய மக்னா யானை - 6 பேர் காயம்; 3 கும்கிகள் வரவழைப்பு
Updated on
1 min read

ஆனைமலை: ஆனைமலை அருகே மக்னா யானையை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையின் ரோந்து வாகனத்தை யானை தாக்கியதில் வனத்துறையினர் 6 பேர் காயமடைந்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில் மக்னா யானை ஒன்று விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. வனத்துறையினர் அந்த மக்னா யானையை ( தந்த மில்லாத ஆண் யானை) பிடித்து ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள உலாந்தி வனச்சரகத்தில் விடுவித்தனர்.

சில நாட்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை ஆனைமலை, பொள்ளாச்சி தாலுகா பகுதியில் உள்ள விளைநிலங்களில் நுழைந்தது. பின்னர் மதுக்கரை பகுதியில் வைத்து மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதன் பின்னர் மானாம்பள்ளி வனச்சரகத்தில் உள்ள மந்திரி மட்டம் வனப்பகுதியில் விடுவித்தனர்.

வால்பாறை, சேக்கல்முடி, வில்லோனி வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மக்னா யானை உலாந்தி வனச்சரகப்பகுதி வழியாக, பொள்ளாச்சி வனச்சரகப்பகுதியில் உள்ள போத்தமடை, தம்மம்பதி வனச்சுற்று பகுதிகளில் சுற்றித்திரிந்தது. வனஎல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களின் விளைநிலங்களுக்குள் மக்னா யானை நுழைவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் புகழேந்தி தலைமையில் தலா 10 பேர் அடங்கிய 6 குழுக்கள் வன எல்லையில் முகாமிட்டு இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வனத்துறையினருக்கு உதவியாக கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து ராஜவர்த்தன், சின்னதம்பி, முத்து ஆகிய கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு தம்மம்பதி, சரளபதி மற்றும் போத்தமடை பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சரளபதியில் உள்ள தனியார் மாந்தோப்பில் நுழைந்த மக்னா யானையை வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக வனத்துறையினரின் ரோந்து வாகனத்தை மக்னா யானை தாக்கியது. ரோந்து வாகனம் கவிழ்ந்ததில் வாகனத்தில் பயணம் செய்த வனவர் மெய்யப்பன், ஓட்டுநர் மணிகண்டன் உள்ளிட்ட வனத்துறையினர் 6 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களுக்கு வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மக்னா யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in