நதிகளை யாரிடமிருந்து மீட்பது?

நதிகளை யாரிடமிருந்து மீட்பது?
Updated on
3 min read

நதிகளை மீட்க முடியுமா?

நதி மூலத்தைக் காண்பவர்கள் எல்லாம், நதி வறள்வதற்கான மூலக்காரணத்தை ஒப்புக்கொள்ளும்வரை, எத்தனை ஆபத்பாந்தவர்கள் வந்தாலும் நதிகளை மீட்க முடியாது!

நோட்டில் ஸ்கேல் வைத்துக் கோடு போட்டதுபோல, ஒரு நதி எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் செல்வதில்லை. எங்கோ ஓரிடத்தில் ஊற்றெடுத்து, பொங்கிப் பிரவாகமெடுத்து, காடு மலை குதித்தோடி, குளம் குட்டைகளை நிரப்பி, நான்கைந்து இடங்களில் கிளை நதிகளாகப் பிரிந்து, இறுதியாகக் கடலில் கலக்கும்.

தான் பிறந்த இடத்திலிருந்து, கடலில் சங்கமிக்கும்வரை, இத்தனை விஷயங்களைக் கடந்து வரும் ஒவ்வொரு நதிக்கும், எத்தனை பிரச்சினைகள் தெரியுமா?

மணல் கொள்ளை, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு, காடழிப்பு, நீரோட்டத்தைத் தடுத்து அணைகள் கட்டுவது, ஆற்றுப் படுகைகள் ஆக்கிரமிப்பு, உயிரினப் பன்மை அழிவு, நதிகள் இணைப்பு, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து போன்ற தவறான திட்டங்கள்… இத்தனை பிரச்சினைகளையும் தாண்டி, இன்னும் சில நதிகள் ஆங்காங்கே பிழைத்திருக்கின்றன என்றால் அதற்குச் சூழலியல் செயற்பாட்டாளர்கள் முதற்கொண்டு எளிய மக்கள் பலரின் உழைப்பும் அரசின் தவறான கொள்கைகளுக்கு அவர்களின் எதிர்ப்புமே காரணம்!

மேற்கண்ட பிரச்சினைகளில், இன்று அதிகம் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கும் ஒன்று… நதிநீர் இணைப்பு. நதிகளை இணைக்கும் திட்டம் தவறானது என்று ஒருபக்கம் பலர் போராடிக் கொண்டிருக்கும்போது, இன்னொரு பக்கம் விவசாயத்துக்கும், குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கும், மின்சாரத் தேவைக்குமான நீர்ப் பற்றாக்குறையைப் போக்க அருமருந்தாகச் சமீபகாலமாக முன்வைக்கப்படுகிறது நதிகள் இணைப்பு.

இமயமலை முதல் மேற்குத் தொடர்ச்சி மலைவரை, சுமார் 37 முக்கிய நதிகள் பாய்கின்றன. அவற்றில் சுமார் 30 நதிகளை இணைக்க மத்திய அரசு முயற்சித்துவருகிறது. ஒருவேளை, இந்தத் திட்டம் சாத்தியமானால் அதனால் கிடைக்கும் நன்மையைவிட தீமையே அதிகம்.

09CHNVK_RIVER5right

“காரணம் இத்திட்டத்தால், சுமார் 15 லட்சம் பேர் தாங்கள் வாழும் இடத்திலிருந்து இடம்பெயர்வார்கள். சுமார் 27 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் நீரில் மூழ்கும். சரணாலயங்கள், காப்பகங்கள் உள்ளடக்கிய சுமார் 1 லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் வன நிலங்கள் மூழ்கும். இப்படி ஒரு ஆபத்தான திட்டத்தை நிறைவேற்ற சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் தேவை” என்கிறது, ‘அணைகள், நதிகள் மற்றும் மக்களுக்கான தெற்காசிய அமைப்பு’.

இப்படி ஒரு திட்டத்துக்கான தேவை என்ன? நதிநீர் வீணாகச் சென்று கடலில் கலக்கிறது என்ற தவறான வாதம்தான்!

நதி எப்போதும் கூடுதலான நீரைத் தன்னுள் கொண்டிருப்பதில்லை. அதேபோல அது வீணாகச் சென்று கடலில் கலப்பதுமில்லை. நதி செல்லும் வழிகளில் உள்ள நிலங்களை வளமாக வைப்பதற்கு ஒவ்வொரு துளியும் முக்கியம்.

காடு, விவசாய நிலம் எனப் பாய்ந்தோடும் நதி, தனக்குள் வண்டல் மண்ணையும் எடுத்துச் செல்கிறது. இந்த வண்டல், நதியின் சுற்றுப்புறங்களில் உள்ள நிலங்களில் படிந்து, அந்தப் பகுதியை வளமாக்கி, இறுதியாகக் கடலை அடைந்து, கடலோரப் பகுதியையும் வளமாக்குகிறது. கடல் நீர், நிலப்பகுதிக்குள் வந்துவிடாமல் தடுப்பதில் நதிகளுக்கு மிக முக்கியப் பங்குண்டு.

இந்நிலையில், தற்சமயம் இறந்துகொண்டிருக்கும் நதிகளை மீட்டெடுக்க, அந்த நதிகளின் கரைகளில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு மரங்களை நடுமாறு வலியுறுத்தப்படுகிறது. மரம் நட்டால், நதியை மீட்டுவிட முடியுமா?

முடியாது. ஒரு நதி உயிர்ப்புடன் திகழ்வதற்கு, மரம் மட்டுமே போதாது. புல்வெளிகள், புதர்கள், நீர்சார்ந்த தாவரங்கள், வெள்ளப்படுகைகள் போன்றவை வளமாக இருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து மணல் கொள்ளையால் வெள்ளப்படுகைகள் மறைந்துவிட்டன. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் போன்றவற்றால் புல்லும் புதரும் காணாமல் போய்விட்டன.

மரம் நட்டால் மழை அதிகமாகப் பெய்யும். மழை அதிகமாகப் பெய்தால், நதியில் நீர் பெருகும் என்ற வாதமும் தவறானது. அதிகளவிலான காடு வளர்ப்பு மற்றும் அதற்குத் தகுந்த நிலப் பயன்பாடு ஆகியவை சரியாக இருந்தால் மட்டுமே, மரம் நட்டால் மழை பொழியும் என்ற வாதம் உண்மையாகும். மரம் நட்டால் மண் அரிப்பு தடுக்கப்படும் என்பதும், பொத்தாம்பொதுவாகச் சொல்லப்படும் வாதம். திடீர் வெள்ளப்பெருக்கு உருவாகும் இடங்களில் மட்டுமே இந்த வாதம் பொருந்தும்.

நதியோரங்களில் மரம் நடச் சொல்வதற்கான இன்னொரு வாதம், மரங்கள் நீரின் தரத்தையும் நிலத்தடி நீரையும் உயர்த்தும் என்பது. வளிமண்டலத்தில் உள்ள சில மாசுபாட்டுப் பொருட்களை, மரங்கள் தடுக்க உதவும். ஆனால், இன்று வீடுகளிலிருந்தும் தொழிற்சாலைகளிலிருந்தும் நேரடியாக ஆற்றில் வெளியேற்றப்படுகின்றன கழிவுகள்.

அதைத் தடுப்பதற்கு எதுவும் செய்யாமல், வெறுமனே மரத்தை நடுவது பயன் தராது. அதேபோல, போர்வெல் போட்டு நிலத்திலிருந்து நீரை உறிஞ்சுவதற்குக் கட்டுப்பாடுகள் கொண்டு வராதவரை, மரங்கள் நிலத்தடி நீரை உயர்த்தும் என்று கனவு காணக் கூடாது.

மரம் நடுவதால் சில பயன்கள் உண்டு. ஆனால் அதுவே, எல்லா சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கும் தீர்வு என்று எந்த அறிஞர் கண்டுபிடித்துச் சொன்னாரோ தெரியவில்லை!

எனவே, நதிகளை யாரிடமிருந்து, எதிலிருந்து மீட்க வேண்டும் என்ற தெளிவு இருந்தால்தான் நல்ல விளைவுகள் ஏற்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in