

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள சிறுகுன்றா தேயிலைத் தோட்டத்தில் கடந்த வாரத்தில் 35-வது நெம்பர் காட்டில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சீதாமுனி குமாரி (23) என்பவரையும், அனில் குமார் (26) என்பவரையும் சிறுத்தை கடித்து படுகாயப்படுத்தியது.
தொழிலாளர்களை அச்சுறுத்தும் சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன், வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இதையடுத்து, நான்கு இடங்களில் கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
தொழிலாளர்கள் கூறும்போது, “வன விலங்குகள் நடமாட்டம் மிகுந்த தேயிலை தோட்ட பகுதியில் இன்சென்டிவ் அடிப்படையில் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும். மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் 4 மணி நேரம் கட்டாயமாக பணியாற்ற தேயிலைத் தோட்ட நிர்வாகம் வற்புறுத்துகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இன்சென்டிவ் பணியை ரத்து செய்ய வேண்டும்” என்றனர்.
வனத்துறையினர் கூறும்போது, “தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பணி நேரம் தவிர காலை, மாலை நேரங்களில் கூடுதல் நேரம் பணி செய்ய அனுமதிக்க கூடாது என தேயிலைத் தோட்ட நிர்வாகத்துக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.