

சி
னிமா கதாநாயகர்கள் ‘நான் தனி ஆள் இல்லை’ என்னும் பேசும் பன்ச் டயலாக், அவர்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, பனை மரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தும். அந்த அளவுக்கு பனை மரத்திலிருந்து ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன.
பனை மரத்தை ஒரு தொழிற்சாலையாகவே பார்க்க வேண்டிய அவசியத்தை விளக்கும் கண்காட்சியை அடையாறில் கடந்த வாரம் ஏற்பாடு செய்திருந்தது ஓ.எஃப்.எம். அங்காடி. பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், பனை மர உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பலவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
பனை ஓலை பின்னல் பொருட்கள், சர்க்கரைக்கு மாற்றான பனங்கற்கண்டு - மாவுத் தயாரிப்பு முறைகளும் விளக்கப்பட்டன. பனை விதைகளைப் பாதுகாப்பது, நுகர்வோருக்குத் தகுந்த முறையில் பனைப் பொருட்களைக் கொண்டுபோய்ச் சேர்ப்பது, தன்னார்வக் குழுக்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களின் மூலமாக பனைப் பொருட்களுக்கான சந்தையை ஊக்குவிப்பது ஆகிய அம்சங்களை முன்னிறுத்தி இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டது என்கிறார் உணவு பாதுகாப்பு கூட்டமைப்பின் அனந்து.
பனை மரத்தின் பயன்களை மக்கள் முழுமையாகத் தெரிந்துகொள்வதற்காக சிதம்பரம் அருகில் செப்டம்பர் 9, 10 ஆகிய இரு நாட்கள் பயிலரங்கை நடத்த இருக்கிறோம். முந்தைய தலைமுறையினரின் முயற்சியால்தான் தற்போது பனை மரங்கள் இந்த அளவுக்காவது மண்ணில் வேரூன்றி இருக்கின்றன. அடுத்த தலைமுறைக்குத் தேவையான பனை மரங்களை வளர்க்க நாம் முனைப்பு காட்ட வேண்டும். அதன் அவசியத்தை விளக்கும் வகையில் இந்தப் பயிலரங்கு அமையும்.
அத்துடன், பனை மரங்கள் விவசாயத்துக்கு எப்படி உதவுகின்றன, பனைப் பொருட்களையும், கைவினைப் பொருட்களையும் தயாரிப்பதற்கான பயிற்சியை துறைசார் நிபுணர்களைக் கொண்டு வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். பனைப் பொருட்களின் விற்பனையை மேம்படுத்துவதன்மூலம் கிராமப் பொருளாதாரம் எப்படி மேம்படும் என்பதையும் இந்தப் பயிலரங்கத்தின் மூலம் விளக்கமாக அறியலாம் என்றார் அனந்து.
தொடர்புக்கு: 9445069900