

எக்ஸ்மவுத்: ஆஸ்திரேலிய நாட்டின் வடமேற்கு கடற்கரை பகுதியான எக்ஸ்மவுத் நகரில் மேகமூட்டம் இல்லாத வான் பகுதியில் சுமார் 20,000 பார்வையாளர்கள் குழுமி இருந்தனர். இவர்கள் அனைவரும் வெறும் சில நொடிகள் மட்டுமே தென்பட்ட முழு சூரிய கிரகணத்தை பார்க்கும் ஆர்வத்தில் அங்கு திரண்டது குறிப்பிடத்தக்கது.
அந்த நகரில் சுமார் 3,000 பேர் மட்டுமே வசித்து வரும் நிலையில், முழு சூரிய கிரகணம் தெரியும் இடம் என்பதால் திரளான மக்கள் அங்கு குவிந்துள்ளனர். இந்தோனேசியா மற்றும் திமோர் தீவின் கிழக்கு பகுதி என சில பகுதிகளிலும் இந்த முழு சூரிய கிரகணம் காணப்பட்டதாக தகவல்.
இந்த கிரகணத்தை பார்க்கும் ஆர்வத்தில் சர்வதேச நாடுகளை சேர்ந்தவர்கள் எக்ஸ்மவுத் நகரின் நிலபரப்பில் கூடாரம் அமைத்து, கேமரா மற்றும் தொலைநோக்கியும் கையுமாக வான் நோக்கி பார்த்தபடி கடந்த நாட்களாகவே காத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் மேகமூட்டம் காரணமாக கிரகணத்தை ஓரளவு மட்டுமே பார்க்க முடிந்தது.
“இது மிகவும் அரிதான கிரகணம். இதனை பார்க்க மக்கள் ஆர்வத்துடன் திரண்டதை பார்க்க முடிந்தது. மேகமூட்டம் இருந்தாலும் கிரகணத்தை பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி” என இந்தோனேசியாவை சேர்ந்த 21 வயதான பெண் அஸ்கா தெரிவித்துள்ளார்.
நாசா வானியலாளர் ஹென்றி த்ரூப், எக்ஸ்மவுத்தில் இருளில் கிரகணத்தை உரத்த குரலில் ஆரவாரம் செய்தவர்களில் ஒருவர்.
"முற்றிலும் இது நம்ப முடியாத வகையில் உள்ளது. அற்புதம். மிகவும் பிரகாசமாகவும், தெளிவாகவும் தெரிந்தது. வெறும் ஒரு நிமிடம் மட்டுமே முழு கிரகணத்தை பார்க்க முடிந்தது. ஆனால், அதுவே நீண்ட நேரம் போல இருந்தது. பார்க்கவே மிகவும் அருமையாக இருந்தது. கண்கவர் காட்சி” என நாசா விஞ்ஞானி ஹென்றி த்ரூப் தெரிவித்திருந்தார். அடுத்து வரவுள்ள இரண்டு சூரிய கிரகணங்கள் அமெரிக்க நாட்டில் மில்லியன் கணக்கான மக்கள் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.