

கோவை: கோவை ஆலாந்துறை ஊராட்சிக்குட்பட்ட நாதே கவுண்டன்புதூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 11-ம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டது.
நேற்று முன்தினம் வரை தீ தொடர்ந்து எரிந்ததால், அதனை கட்டுப்படுத்தி, அணைக்கும் பணியில் வனப் பணியாளர்கள், தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் என சுமார் 300 பேர் இரவு, பகலாக சுழற்சி முறையில் ஈடுபட்டனர். தீயை கட்டுப்படுத்த இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் கடந்த 16-ம் தேதி சுமார் 22 ஆயிரம் லிட்டர் நீர் தெளிக்கப்பட்டது.
இந்த முயற்சிகளின் பலனாக நேற்று தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “தீ முழுமையாக அணைக்கப்பட்டாலும் சில இடங்களில் தணல் இருந்தது. மண் மூட்டைகளை எடுத்துச்சென்று, மண்கொட்டி அவற்றை அணைக்கும் பணி நேற்று நடைபெற்றது.
மீண்டும் அந்தப் பகுதியில் எங்கும் காட்டுத் தீ ஏற்படாமல் இருப்பதை கண்காணிக்க பணியாளர்கள் அங்கேயே மேலும் 2 நாட்கள் முகாமிட்டிருப்பர். அதன் பிறகு சேதமடைந்த பரப்பரளவு ஜிபிஎஸ் உதவியுடன் முழுமையாக கணக்கிடப்படும்” என்றனர்.