

ஈரோடு: தாளவாடியில் பயிர்களைச் சேதப்படுத்தி வரும் ‘கருப்பன்’ யானையைப் பிடிக்க 4-வது முறையாக இரு கும்கி யானைகளை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர்.
சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு உட்பட்ட தாளவாடி மற்றும் ஜீரஹள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ‘கருப்பன்’ என பெயரிடப்பட்ட ஒற்றை யானை விளைநிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது. கருப்பன் யானை தாக்கியதில் இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
யானையைப் பிடிக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து சின்னத்தம்பி, ராஜவர்தன் என இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன. இவை, ‘கருப்பன்’ யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டியடித்தன. சில நாட்கள் வனப்பகுதிக்குள் இருந்த ‘கருப்பன்’ யானை, மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தத் தொடங்கியது.
இதையடுத்து கடந்தாண்டு, டிசம்பர் மாதம் பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து, அரிசி ராஜா, கலீம், கபில்தேவ் என மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. அவற்றின் உதவியோடு, ‘கருப்பன்’ யானையைச் சுற்றி வளைத்த மருத்துவக் குழுவினர் மயக்க ஊசி செலுத்தினர். 6 முறை மயக்க ஊசி செலுத்தியும், கருப்பன் யானை மயக்கம் அடையாமல் வனப்பகுதிக்கு தப்பியது.
இதன்பின், கடந்த மாதம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக் காட்டில் இருந்து பொம்மன், சுஜய் என 2 கும்கி யானைகள் தாளவாடிக்கு அழைத்து வரப்பட்டன. இம்முறையும் ‘கருப்பனை’ பிடிக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், பிரதமர் மோடி முதுமலை வருகையையொட்டி கும்கி யானைகள் திருப்பி அனுப்பப்பட்டன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் ‘கருப்பன்’ யானை பயிர்களை சேதப்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ‘கருப்பன்’ யானையைப் பிடிக்க, 4-வது முறையாக பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து மாரியப்பன், சின்னத்தம்பி என்ற இரு கும்கி யானைகள் நேற்று முன் தினம் தாளவாடிக்கு கொண்டு வரப்பட்டன.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: கடந்த ஓராண்டாக ‘கருப்பன்’ யானையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ‘கருப்பன்’ யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். 6 முறைக்கு மேல் மயக்க ஊசி செலுத்தியும், அதற்கு யானை கட்டுப்படவில்லை. இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை, பயிர்களைச் சேதப்படுத்தி விட்டு அதிகாலையில் வனத்திற்குள் சென்று விடுகிறது.
அதை யாரும் தொந்தரவு செய்யாமல், இயல்பாக வந்து செல்லும் வகையில் பழக்கப்படுத்தி, அதன்பின் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்றனர். ‘கருப்பன்’ யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். 6 முறைக்கு மேல் மயக்க ஊசி செலுத்தியும், அதற்கு யானை கட்டுப்படவில்லை.